Paristamil Navigation Paristamil advert login

மன்னாரில் 10 வருடங்களுக்குப் பின் பிரசவம்: தாயும் சேயும் அகால மரணம் - விசாரணைகள் தீவிரம்

மன்னாரில் 10 வருடங்களுக்குப் பின் பிரசவம்: தாயும் சேயும் அகால மரணம் - விசாரணைகள் தீவிரம்

20 கார்த்திகை 2024 புதன் 10:14 | பார்வைகள் : 2939


மன்னார் வைத்தியசாலையில் தாய் மற்றும் சிசு உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஆசாத் எம்.ஹனிபா தெரிவித்தார்.

மன்னார் பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த 28 வயதான இளம் தாய் வேணுஜா என்றழைக்கப்படும் ஜெகன் ராஜசிறி திருமணமாகி 10 வருடங்களாக குழந்தை இல்லாத நிலையில் நேற்றைய தினம் (19) பிரசவத்துக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையின்போது தாயும் சேயும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், உறவினர்கள், பெற்றோர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்றிணைந்து மகப்பேற்று விடுதியில் போராட்டம் நடத்திய நிலையில் வைத்தியசாலையில் பதட்டமான நிலை ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், சம்பவ இடத்துக்கு வருகை தந்த மன்னார் நீதவான்   இறந்த தாய் மற்றும் சேயின்  உடல்களை பிரேத பரி சோதனைக்காகவும் மேலதிக விசாரணைகளுக்காக வும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் அமைக்கப்பட்ட விசேட குழு இன்றைய தினம் காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சென்று, விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், மாவட்ட ரீதியாக இவ்விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதோடு வட மாகாண சுகாதார அமைச்சிடமும் விசாரணைகளை முன்னெடுக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்த விசாரணையின் முடிவில் தவறிழைத்தமை கண்டுபிடிக்கப்பட்டால் உரியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்