அவதூறுகளை பரப்பாதீர்கள்: வம்பு இழுத்த கனடாவுக்கு இந்தியா எச்சரிக்கை!
21 கார்த்திகை 2024 வியாழன் 03:53 | பார்வைகள் : 281
நிஜ்ஜார் கொலை குறித்த கனடா ஊடக அறிக்கைக்கு இந்தியா பதிலளித்துள்ளது. அவதூறு பிரசாரங்கள் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை சேதப்படுத்தும் என இந்தியா எச்சரித்துள்ளது.
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்தியா மீது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த குற்றச்சாட்டை தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. கனடா அரசு, இந்தியா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது என மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.
காலிஸ்தானியர்களுக்கு ஆதரவாக கனடா அரசு செயல்பட்டு வருகிறது. இந்திய தூதரக அதிகாரிகளுக்கு காலிஸ்தானியர்கள் மிரட்டல் விடுப்பதை கனடா அரசு வேடிக்கை பார்க்கிறது' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த சூழலில்,ஹர்தீப் சிங் நிஜாரைக் கொல்லச் சதித்திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படுவது, பிரதமர் நரேந்திர மோடிக்குத் தெரியும் என கனடா ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருந்தது. இதற்கு பதிலடி கொடுத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாங்கள் பொதுவாக மீடியா அறிக்கைகள் குறித்து கருத்து தெரிவிப்பதில்லை. இருப்பினும், கனடா அரசாங்கம் ஆதாரம் இல்லாமல் ஒரு செய்தித்தாளில் கூறப்படும் இது போன்ற கேலிக்குரிய அறிக்கைகளை நிராகரிக்க வேண்டும். இது போன்ற அவதூறு பிரசாரங்கள் ஏற்கனவே சிதைந்திருக்கும் இரு நாட்டு உறவுகளை மேலும் சேதப்படுத்தும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.