கன மழையை எதிர்கொள்ள பேரிடர் மீட்பு படைகள் தயார்
22 கார்த்திகை 2024 வெள்ளி 03:41 | பார்வைகள் : 949
டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையை எதிர்கொள்ள, தேசிய பேரிடர் மீட்பு படையின் 15 குழுக்களும், தமிழக பேரிடர் மீட்பு படையின் 15 குழுக்களும் தயார் நிலையில் உள்ளதாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
வடகிழக்கு பருவமழை சராசரி மழையளவை விட, 6 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. ராமநாதபுரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில், இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை ஒருங்கிணைக்க, கண்காணிப்பு அதிகாரியாக வள்ளலார் அனுப்பப்பட்டு உள்ளார்.
நாகப்பட்டினம், ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், 20 செ.மீ., அளவுக்கு கனமழை பெய்யலாம் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
கனமழையை எதிர்கொண்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள, போதுமான உபகரணங்கள் தயாராக உள்ளன. மண்டல அளவிலான மீட்பு மற்றும் நிவாரண குழுக்கள் அமைக்கப்பட்டு, நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்திய பெருங்கடல் மற்றும் அதை அடுத்துள்ள தெற்கு அந்தமான் கடல் பகுதியில், மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது, அடுத்த இரண்டு நாட்களில் தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக, 25 முதல் 27ம் தேதி வரை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலுார், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம்.
அதை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க, கலெக்டர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படையின், 15 குழுக்களும், தமிழக பேரிடர் மீட்பு படையின், 15 குழுக்களும் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.