பிரான்ஸ்-ஹைடி நாடுகளுக்கிடையே முறுகல் நிலை.. மக்ரோனின் வார்த்தை பிரயோகத்தால் சர்ச்சை!!
22 கார்த்திகை 2024 வெள்ளி 07:00 | பார்வைகள் : 1525
பிரான்சுக்கும் கரீபியன் நாடுகளில் ஒன்றான ஹைட்டி (Haiti) க்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. பிரான்சுக்கான தங்களது தூதுவரை ஹைட்டி திரும்ப அழைத்துள்ளது.
இந்த முறுகல் நிலைக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வெளியிட்ட வார்த்தை பிரயோகமே காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் (நவம்பர் 18 -19 ஆம் திகதிகளில்) பிரேஸிலின் ரியோ (Rio de Janeiro) நகரில் G20 மாநாட்டு இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அங்கு வைத்து பேட்டி ஒன்றை வழங்கியுள்ளார். அதில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட சிறிய காணொளி ஒன்றே இந்த பரபரப்புக்கு காரணம்.
ஹைடியின் பிரதமராக இருந்த Garry Conille, அந்நாட்டின் இடைக்கால குழுவினரால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பிரதமராக அறிவிக்கப்பட்டு ஐந்து மாதங்களிலேயே அவரது பதவி பறிக்கப்பட்டது. அதை அடுத்து, அது தொடர்பில் ஜனாதிபதி மக்ரோன் தெரிவிக்கையில்,. அவர்கள் முற்றிலும் முட்டாள்கள் என அர்த்தம் வரும்படி “"complètement cons" எனும் வார்த்தையை பயன்படுத்தியிருந்தார். இந்த வார்த்தை உடனடியாக பெரும் எதிர்ப்புகளை ஏற்பட்டுத்தியது.
”நட்பற்ற மற்றும் பொருத்தமற்ற வார்த்தைகள். இதனை சரி செய்துகொள்ள வேண்டும்!” என தெரிவித்த ஹைட்டியின் வெளியுறவு அமைச்சர் Antoine Michon, ”இந்த ஏற்றுக்கொள்ள முடியாத விமர்சனத்தை அடுத்து’ பிரான்சுக்கான தங்களது தூதுவரையும் திரும்ப அழைப்பதாகவும் தெரிவித்தார்.