56 வருடங்களின் பின்னர் பரிசில் பதிவான அதிகூடிய பனிப்பொழிவு!
22 கார்த்திகை 2024 வெள்ளி 12:27 | பார்வைகள் : 1316
எதிர்பார்த்ததை விட நேற்று நவம்பர் 21 ஆம் திகதி பரிசில் அதிகளவு பனி கொட்டித்தீர்த்தது. வீதிகள் அனைத்தும் பனி படர்ந்து போக்குவரத்து பாதிப்பினை ஏற்படுத்தியிருந்தது. எயார் பிரான்சுக்கு சொந்தமான கிட்டத்தட்ட 120 விமானங்கள் இரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கபப்ட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 56 வருடங்களின் பின்னர் பரிசில் நவம்பர் மாதம் ஒன்றில் இதுபோன்ற அதிகூடிய பனிப்பொழிவு பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் பரிசில் 4 செ.மீ வரை பனிப்பொழிவும், Yvelines மாவட்டத்தில் கிட்டத்தட்ட 15 செ.மீ வரை பனி கொட்டித்தீர்த்தது. ”poudreuse neige” எனப்படும் துகள் பனி இத்தனை அளவில் கொட்டித்தீர்ப்பது 1968 ஆம் ஆண்டின் பின்னர் பதிவாகிறது. அந்த ஆண்டு நவம்பரில் 6 செ.மீ வரை பதிவானதே அதிகூடிய பனிப்பொழிவாக இருந்தது.
Météo-France வெளியிட்ட தரவுகளின் படி Plessis-Gassot (Val-d'Oise) நகரில் அதிகபட்சமாக 20cm பனிப்பொழிவும், Vinantes (Seine-et-Marne) நகரில் 10cm பனிப்பொழிவும், Toussus-le-Noble (Yvelines) நகரில் 7cm பனிப்பொழிவும் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.