அ.தி.மு.க., - பா.ஜ., உறவு? நயினார்- வேலுமணி ஆலோசனை
23 கார்த்திகை 2024 சனி 04:04 | பார்வைகள் : 276
தமிழக பா.ஜ., துணைத்தலைவர் நயினார் நாகேந்திரனை, அவரது வீட்டில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில்
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு முன், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து, அ.தி.மு.க., வெளியேறியது. 'இனிமேல் எந்த தேர்தலிலும், பா.ஜ., உடன் கூட்டணி இல்லை' என,
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்தார்.
மாவட்ட செயலர்கள் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - தே.மு.தி.க., மற்றும் புதிய தமிழகம் கட்சிகள் இணைந்து
போட்டியிட்டன.
இரு பிரிவுகள்
பா.ஜ., தலைவர்களில் ஒரு பிரிவினர், அ.தி.மு.க., கூட்டணியை விரும்புகின்றனர். அதேபோல, அ.தி.மு.க.,விலும் ஒரு தரப்பினர், பா.ஜ., கூட்டணியை விரும்புகின்றனர். ஆனால், பழனிசாமியும், அண்ணாமலையும் விரும்பவில்லை. இதனால், இரு கட்சிகளிலும் கூட்டணியை புதுப்பிக்க விரும்புவோர், விரும்பாதவர் என, இரு பிரிவுகள் உருவாகி உள்ளன.
அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, பழனிசாமி தலைமையில் கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. நடிகர் விஜய் கட்சி துவக்கியுள்ள நிலையில், அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.எனவே, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும்; பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும். அவ்வாறு செய்தால், தி.மு.க., கூட்டணியை வீழ்த்தலாம் என, முன்னாள் அமைச்சர்கள் சிலர் நம்புகின்றனர்.
இதை பழனிசாமி ஏற்கவில்லை. 'நீக்கியவர்களை சேர்க்க வாய்ப்பில்லை. பா.ஜ., கூட்டணிக்கும் வாய்ப்பில்லை' என்று அறிவித்துள்ளார். ஆனாலும், இரு தரப்பிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
அதை முறியடிக்கும் வகையில், ஆர்.எஸ்.எஸ்., பேரணியில் பங்கேற்ற, தன் தீவிர ஆதரவாளரான கன்னியாகுமரி மாவட்ட செயலர் தளவாய்சுந்தரத்தின் பதவிகளை பறித்து, பா.ஜ., ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் பழனிசாமி. தளவாய் வருத்தம் தெரிவித்த பின், பறித்த பதவிகளை வழங்கினார்.
கட்சியில் தன் மீது யாருக்கும் அதிருப்தி இல்லை என்று, அடுத்த கட்ட தலைவர்களுக்கு நிரூபிக்க, மாவட்ட வாரியாக கள ஆய்வு நடத்துமாறு சீனியர் தலைவர்களை அனுப்பினார்.
ஆனால், அதுவே அவருக்கு சிக்கலை உண்டாக்கி விட்டது. கோஷ்டி பூசல் வெளிச்சத்துக்கு வருகிறது. நேற்று நெல்லையில் நடந்த கள ஆய்வில், இரு தரப்பினர் கைகலப்பில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்த, முன்னாள் அமைச்சர் வேலுமணி மிகவும் சிரமப்பட்டார்.
அரசியல் நிலவரம்
கூட்டம் முடிந்த பின், தமிழக பா.ஜ., துணைத்தலைவரும், சட்டசபை பா.ஜ., தலைவருமான நயினார் நாகேந்திரனை, அவரது வீட்டுக்கு சென்று வேலுமணி சந்தித்தார்.ஏற்கனவே அவர் பழனிசாமியுடன் கருத்து வேறுபாட்டில் இருப்பதாகவும், பா.ஜ., உடனான கூட்டணியை விரும்புவதாகவும் தகவல் வெளியானது. இந்த சூழ்நிலையில், நயினார் நாகேந்திரனை வேலுமணி சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
சந்திப்பின் போது, தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து இருவரும் விவாதித்துள்ளனர். பா.ஜ.,வுடன் எந்த உறவும் இனி இல்லை என பழனிசாமி கூறி வரும் நிலையில், நயினார் நாகேந்திரனை தேடிப்போய் வேலுமணி சந்தித்து பேசிய நிகழ்வு, அ.தி.மு.க., வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இரு தரப்பிலும் இது குறித்து கருத்து தெரிவிக்க யாரும் தயாராக இல்லை.