மணிப்பூரில் வன்முறை அதிகரிப்பு; விரைந்தனர் 20 ஆயிரம் ராணுவ வீரர்கள்!
23 கார்த்திகை 2024 சனி 04:09 | பார்வைகள் : 297
மணிப்பூரில் வன்முறை மீண்டும் அதிகரித்து வருவதால், 20 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் விரைந்துள்ளனர்.
மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என மெய்டி சமூகத்தினர் நீண்டகாலமாக கோரி வருகின்றனர். மெய்டி மற்றும் கூகி சமூகத்தினர் இடையே மோதல் வெடித்தது. இது தொடர்ந்து வன்முறை, கலவரமாக மாறியது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, இரு சமூகத்தினர் இடையே அடிக்கடி மோதல், வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.
சமீபத்தில் ஜிரிபாம் மாவட்டத்தில் ஆயுதம் ஏந்திய கூகி சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், பாதுகாப்புப் படையினருடன் சண்டையில் ஈடுபட்டனர். அதில், போராட்டக்காரர்கள், 10 பேர் கொல்லப்பட்டனர். இதனால் வன்முறை மீண்டும் தலைதூக்கியது. முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வீடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், வன்முறை மீண்டும் அதிகரித்து வருவதால், 20 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் விரைந்துள்ளனர். கடந்த 10 நாட்களில், மாநிலம் முழுவதும் 90 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மணிப்பூர் மாநில பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் கூறியதாவது: இன்று நாங்கள் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தினோம்.
இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களின் முக்கிய பகுதிகளில் பாதுாப்பை நாங்கள் மதிப்பாய்வு செய்தோம். ராணுவம், போலீஸ் மற்றும் சி.ஆர்.பி.எப்., அதிகாரிகள் பங்கேற்றனர். தற்போதைய நிலைமை குறித்து அவர்களுடன் ஆலோசித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.