த.வெ.க.,வில் விஜய் அடுத்த அதிரடி...!
23 கார்த்திகை 2024 சனி 04:15 | பார்வைகள் : 270
தமிழக வெற்றிக்கழகத்தில் மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை இறுதி செய்யும் பணிகளில் நடிகர் விஜய் இறங்கி உள்ளார்.
தான் ஆரம்பித்த தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சி பணிகளில் நடிகர் விஜய் தீவிரமாக இறங்கி இருக்கிறார். தி.மு.க., பா.ஜ., ஆகிய கட்சிகளை ஒரே நேரத்தில் எதிர்த்து தமது அரசியல் பயணத்தை தொடங்கி உள்ள அவர், அடுத்த கட்டமாக கட்சியை பலப்படுத்தவும், அதிக உறுப்பினர்களை சேர்க்கவும் நிர்வாகிகளை முடுக்கி விட்டுள்ளார்.
முழுமையான அதே நேரத்தில் தீவிரமான அரசியல் பணியில் இறங்கி உள்ள நடிகர் விஜய், கட்சியை பலப்படுத்த முக்கிய முடிவுகளை எடுக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு கட்சியை போலவும், மாவட்ட செயலாளர்களை நியமித்து வலுவான கட்டமைப்பை கட்டமைக்க முடிவு செய்துள்ளார் என்று நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறி இருப்பதாவது; கட்சியை ஆரம்பித்து, தமது இலக்கை அறிவித்துள்ள நடிகர் விஜய் அதை நோக்கி வேகமாக நகர ஆரம்பித்துள்ளார். அதற்காக கட்சியில் அமைப்பு ரீதியாக மாவட்டச் செயலாளர்களை நியமிக்க முடிவு எடுத்துள்ள அவர், அதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளார்.
அதில் முக்கிய கட்டமாக, மாவட்டச் செயலாளர்கள் நியமனம் இருக்க போகிறது. ஒவ்வொரு மாவட்டம் தோறும், தமிழகம் முழுவதும் நிர்வாகிகளை கூட்டி, கருத்துக் கேட்பு பணிகளை துவங்க உத்தரவிட்டுள்ளார். அந்த பணிகளும் வேகம் எடுத்துள்ளன.
மாவட்ட வாரியாக நிர்வாகிகளை கூட்டி, ஒன்றியம், பகுதி, பேரூர், கிளை நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் தலைவர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றன. அவர்களின் கருத்துகள்,எதிர்பார்ப்புகள், பரிந்துரைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இதில் ஒரு முக்கிய விஷயத்தை நடிகர் விஜய் கையாள்கிறார். தமது தீவிர ரசிகராகவும், விஜய் மக்கள் இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றியவர்களுக்கும் முக்கியத்துவம் தர இருக்கிறார். அவர்களை அடுத்தக் கட்டத்துக்கு அழைத்துச் செல்லும் விதமாக, பெரும்பான்மையான மாவட்டச் செயலாளர்களை மக்கள் இயக்கத்தில் உள்ள விசுவாசிகளுக்கு அளிக்க எண்ணி உள்ளார்.
மற்ற கட்சிகளை போல மாவட்டம் வாரியாக செயலாளர்கள் நியமிக்கப்பட இருக்கின்றனர். மொத்தம் 100 மா.செ.,க்கள் முதல் கட்டமாக நியமிக்கப்படக்கூடும். சட்டசபை தொகுதிகள் வாரியாக, அந்த பட்டியலை தயாரிக்கும் பணிகளும் ஏற்கனவே தொடங்கி, பட்டியலும் தயாரிக்கப்பட்டதாக தெரிகிறது.
தற்காலிகமாக ரெடியாகி உள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களின் சமகால செயல்பாடுகள், மாவட்ட அளவில் கட்சியில் அவர்களின் ஒருங்கிணைப்பு பணிகள், மாற்று கட்சியினரிடம் அவர்களின் அணுகுமுறை, கட்சியின் கடைக்கோடி தொண்டர்களை நடத்தும் விதம் ஆகியவற்றை கண்காணிக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.
அதே நேரத்தில் மாவட்டச் செயலாளர்கள் கட்சியின் வளர்ச்சிக்காக திட்டமிட்டு வைத்துள்ள எதிர்கால பணிகள் அல்லது செயல்பாடுகள் பற்றியும் விரிவாக கேட்டு தெரிந்து கொள்ளவும் நடிகர் விஜய் ஆர்வம் காட்டி வருகிறார்.
அவ்வளவு அஜாக்கிரதையாகவும், அசாதாரணமாகவும் கட்சி பணிகளில் இறங்கக்கூடாது, கட்சிகளில் அரவணைப்பும், அதே நேரத்தில் அதீத அரசியல் செயல்பாடுகளும் முக்கியம் என அவர் எதிர்பார்க்கிறார். அவரின் எண்ணங்களுக்கு ஏற்க நாங்கள் செயல்பட தயாராகி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.
கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நியமன விவகாரத்தில் நடிகர் விஜயின் நடவடிக்கைகளையும் அரசியல் நிபுணர்கள் உற்று நோக்கி வருகின்றனர். இதுபற்றி அவர்கள் கூறி உள்ளதாவது:
தாம் யாரை எதிர்க்கிறோம் என்பதை பட்டவர்த்தனமாக அறிவித்து விட்டு அரசியல் களத்தில் நடிகர் விஜய் களம் இறங்கி இருக்கிறார். அரசியல் சூது அவ்வளவு எளிதானது அல்ல, மிக ஜாக்கிரதையாக கையாள வேண்டும். அதை எல்லாம் தெள்ளத் தெளிவாக உணர்ந்து, புரிந்து அதற்கேற்ப செயல்பாடுகளில் கவனம் செலுத்தி வருகிறார் என்று சொல்லலாம். அதன் முன்னோட்டமாக 100 மா.செ.,க்கள் என்ற பிளானை விரைவில் எதிர்பார்க்கலாம்.
கட்சிக்குள் நிர்வாகிகள் நியமனம் மற்றும் அதன் அறிவிப்பை தொடர்ந்து எழும் பூசல்கள் தான் கட்சியில் தற்போதைய நிதர்சனம் என்ன என்பதை வெளிப்படுத்தும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.