அவதானம் : €450,000 யூரோக்கள் குற்றப்பணம்.. மின்சார அளவீடுபெட்டியை சோதனையிடும் மின்வாரியம்!!
24 கார்த்திகை 2024 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 887
மின்சார கட்டணங்களில் இடம்பெற்று வரும் மோசடிகளைத் தடுக்க, வீடுகளில் பொருத்தப்பட்டு மின்சார அளவீடு பெட்டிகள் சோதனையிடப்பட உள்ளது. இதற்காக மின்சார வாரியம் 100 பேர் கொண்ட குழு ஒன்றை தயார்ப்படுத்தியுள்ளது.
2015 ஆம் ஆண்டுகளில் Linky நிறுவனம் தயாரித்த மஞ்சள் நிற மின் அளவீடு பெட்டிகளில் மோசடி செய்வதற்குரிய வாய்ப்புகள் இருப்பதாகவும், இதனால் மின் கட்டணங்களைக் குறைத்துக்கொள்ள சந்தர்ப்பம் இருப்பதாவும் தெரிவிக்கப்பட்டு இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
Enedis மின் வழங்குனர்களின் 35 மில்லியன் வாடிக்கையாளர்களில் 100,000 பேரது வீடுகளில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. மின்சாரக்கட்டணம் 50 தொடக்கம் 70% சதவீதம் வரை குறைத்து காண்பிக்கப்படுவதாக சந்தேகம் கொண்ட மின்வாரியம் இது தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டது. இந்த மோசடியினால் 250 மில்லியன் யூரோக்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் Enedis தெரிவித்துள்ளது.
Île-de-France, Auvergne-Rhône-Alpes, Grand Est, Provence-Alpes-Côte d'Azur மற்றும் Occitanie மாகாணங்களில் இதுவரை 500 வீடுகளில் சோதனையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடி செய்திருப்பது உறுதி செய்யப்பட்டால், வீட்டின் உரிமையாளருக்கு மூன்று ஆண்டுகள் சிறையும், €450,000 யூரோக்கள் குற்றப்பணமும் அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.