60 ஆண்டுகளில் இல்லாத நிலை; மஹாராஷ்டிராவில் எதிர்க்கட்சி தலைவர் யாருமில்லை!
24 கார்த்திகை 2024 ஞாயிறு 05:54 | பார்வைகள் : 123
மஹாராஷ்டிரா சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை. இது 60 ஆண்டுகளில் நடக்காத ஒன்று ஆகும்.
மஹாராஷ்டிரா தேர்தல் வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவுக்கு மாபெரும் வெற்றி பெற்று, பா.ஜ., தலைமையிலான மஹாயுதி கூட்டணி ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதில், தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களில் பா.ஜ., அபார வெற்றி பெற்றுள்ளது.
பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில், மஹாயுதி கூட்டணி 234 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இதில், பா.ஜ., மட்டும் 132 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. சிவசேனா 57, மற்றும் தேசியவாத காங்., 41 இடங்களில் வென்றன.
மஹா விகாஸ் அகாடி கூட்டணியில், உத்தவ் தாக்கரே கட்சி 20, காங்., 16, சரத் பவார் கட்சி 10 இடங்களில் வென்றுள்ளன. இந்தக் கூட்டணி ஒட்டுமொத்தமாக, 50 இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. இதனால், மஹாராஷ்டிரா சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி அந்தஸ்து யாருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை. இது 60 ஆண்டுகளில் நடக்காத ஒன்று ஆகும். கடந்த 1962 மற்றும் 1967ம் ஆண்டுகளில் எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கும் கிடைக்கவில்லை.
இது குறித்து, சட்டசபையின் முன்னாள் முதன்மை செயலாளர் கூறியதாவது: பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து பெற, மொத்தமுள்ள சட்டசபை உறுப்பினர் எண்ணிக்கையில் 10% இடங்களை பெற்று இருக்க வேண்டும். அதன்படி 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் 28 உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே எதிர்க்கட்சித் தலைவரை பரிந்துரைக்க முடியும். தேர்தல் முடிவுகளின் படி, மிகப்பெரிய எதிர்க்கட்சியான உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 21 உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ளது, அது பதவிக்கு உரிமை கோர முடியாது.
காங்கிரஸ், 16 உறுப்பினர்களையும், சரத் பவார் தலைமையிலான என்சிபி, 10 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. இதனால் இவர்கள் யாருக்கும் எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்க வாய்ப்பில்லை. விதிகளின்படி, தேர்தலுக்கு முன் கூட்டணி வைத்திருந்தாலும், மூன்று கட்சிகளின் கூட்டு பலத்தின் அடிப்படையில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற முடியாது, என்றார்.