தென் கொரியாவில் கடும் பனிப்பொழிவு ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை
28 கார்த்திகை 2024 வியாழன் 14:28 | பார்வைகள் : 351
தென் கொரியாவில் இரண்டு நாட்களாக கடுமையான பனிப்பொழிவுக்கு இலக்காகியுள்ள நிலையில் விமான சேவைகள் முடங்கியதுடன் இயல்பு வாழ்க்கையும் ஸ்தம்பித்துள்ளது.
விமான சேவைகளுடன் படகு போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடும் குளிர் காரணமாக இதுவரை ஐவர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளியான தரவுகளின் அடிப்படையில், 1907ல் பதிவுகள் தொடங்கியதிலிருந்து, தலைநகரான சியோலில் கடும் பனிப்பொழிவு ஏற்படுவது இது மூன்றாவது முறையாகும்.
சியோலில் சில பகுதிகளில் நாள் முழுவதும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. வியாழன் காலை வரை சியோலின் சில பகுதிகளில் 40 செமீ அளவுக்கும் அதிகமான பனி குவிந்தது.
இதனால் 140க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வானிலை அதிகாரிகள் நகரின் பெருநகரப் பகுதியில் கடுமையான பனி எச்சரிக்கைகளை நீக்கினர்.
காங்வோன் மாகாணத்தின் மத்திய நகரமான வோன்ஜூவில் உள்ள நெடுஞ்சாலையில் 53 வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதின. பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில், புதன்கிழமை மாலை 11 பேர் காயமடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சியோலின் முக்கிய விமான நிலையமான இன்சியான் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது, பயணிகள் சராசரியாக இரண்டு மணி நேரம் தாமதத்தை எதிர்கொள்கின்றனர். வியாழன் அன்று 31 சதவிகித விமானங்கள் தாமதமாகவும் 16 சதவிகித விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
சுமார் 142 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், 76 படகு வழித்தடங்கள் இடைநிறுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர், அதே நேரத்தில் சில ரயில் தாமதங்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதியத்திற்குள், கியோங்கி மாகாணத்தில் மழலையர் பள்ளி உட்பட சுமார் 1,285 பாடசாலைகள் மூடப்பட்டன. அண்டை நாடான வடகொரியாவில் செவ்வாய் மற்றும் புதன் இடையே சில பகுதிகளில் 4 அங்குலம் அளவுக்கும் அதிகமான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.