இந்தோனேசியாவில் கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவு - 27 பேர் பலி
29 கார்த்திகை 2024 வெள்ளி 09:41 | பார்வைகள் : 180
இந்தோனேசியாவில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 27 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.
இந்தோனேசியாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த வாரம் தொடங்கிய தொடர் மழை நான்கு மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஆண்டு இறுதி வரை கடுமையான வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள மிகவும் மோசமான சம்பவங்களில் ஒன்று புதன்கிழமை டெலி செர்டாங்(Deli Serdang) மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவாகும்.
இதில் 7 பேர் உயிரிழந்ததுடன் 20 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
வார இறுதியில் நடத்தப்பட்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் பல்வேறு பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து 20 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
வடக்கு சுமத்ரா பொலிஸ் செய்தித் தொடர்பாளர் Hadi Wahyudi, மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதிகாரிகள் காணாமல் போனவர்களை தீவிரமாக தேடி வருவதாகவும் தெரிவித்தார்.