யாழில் அகற்றப்பட்ட சோதனை சாவடிகள் மீள முளைப்பதால் அச்சம்
7 தை 2025 செவ்வாய் 09:27 | பார்வைகள் : 599
நாடாளுமன்ற தேர்தலிற்கு முன் வடக்கில் அகற்றப்பட்ட சோதனைச் சாவடிகள் மீளவும் அமைக்கப்பட்டு வருகின்றது.
இந்நடவடிக்கை தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
போரின் போதும் போர் முடிவுற்ற பின்னரும் கடந்த ஆட்சிக்காலங்களில் பல இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
சோதனைச் சாவடிகளை அகற்றுமாறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், பொதுமக்களும் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்திருந்தனர்.
இந்நிலையில் நாட்டில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு வந்து சென்ற பின்னர் சோதனைச் சாவடிகள் அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டன.
எனினும், அந்தச் சோதனைச் சாவடிகள் தற்போது மீண்டும் அதே இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன.
அரசின் புதிய நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் மத்தியில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாம்களை அகற்றுவதாக அநுர அரசு உறுதியளித்திருந்த போதிலும் தற்போதும் அவற்றினை நிரந்தரமாக்கும் வகையிலான காணி பிடிப்பு நடவடிக்கைகள் தொடர்வதும் குறிப்பிடத்தக்கது.