திருப்பதியில் கூட்ட நெரிசல்; 6 பேர் பலியான சோகம்; மன்னிப்பு கோரியது திருப்பதி தேவஸ்தானம்!
9 தை 2025 வியாழன் 03:46 | பார்வைகள் : 462
திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேர் பலியான சம்பவத்திற்கு தேவஸ்தானம் மன்னிப்பு கோரியது. ஒரே கவுன்டரில் 5,000க்கும் மேற்பட்டோர் திரண்டது எதிர்பாராதது என விளக்கம் அளித்துள்ளது.
ஆந்திராவின் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்புடன் வைகுண்ட ஏகாதசி தரிசனம் துவங்குகிறது. வரும் 19ம் தேதி வரை வைகுண்ட துவாரம், பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் தரிசனத்திற்கான இலவச டோக்கன் வாங்க நின்றிருந்த பக்தர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, சேலத்தைச் சேர்ந்த மல்லிகா, பொள்ளாச்சியை சேர்ந்த நிர்மலா உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர்.
மன்னித்துவிடுங்க!
இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி, 6 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு திருப்பதி தேவஸ்தானம் மன்னிப்பு கோரியது. இது குறித்து, திருப்பதி தேவஸ்தானம் குழு உறுப்பினர் பானு பிரகாஷ் கூறியதாவது: கூட்ட நெரிசல் துரதிர்ஷ்டவசமானது. இந்த சம்பவம் தொடர்பாக பக்தர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். சில குறைபாடுகள் உள்ளன. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் இழந்த உயிர்களை மீட்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
கடும் நடவடிக்கை
திருப்பதி எம்.ஜி.எம்., கவுன்டரின் மெயின் கேட்டை முன்னறிவிப்பின்றி திறந்து விட்டதே கூட்ட நெரிசல் ஏற்பட்ட காரணம்; இந்த விஷயத்தில் அலட்சியமாகச் செயல்பட்ட டி.எஸ்.பி., மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் வெங்கடேஷ்வர் தெரிவித்தார்.
நேரில் செல்கிறார் சந்திரபாபு
கூட்ட நெரிசலில் சிக்கி, காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பக்தர்களை இன்று (ஜன.,09) முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சென்று நலம் விசாரிக்க உள்ளார்.