Paristamil Navigation Paristamil advert login

கனடாவின் புதிய பிரதமர்....? எழுந்துள்ள சர்ச்சை....

கனடாவின் புதிய பிரதமர்....?  எழுந்துள்ள சர்ச்சை....

10 தை 2025 வெள்ளி 08:37 | பார்வைகள் : 767


கனடா  பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாகவும் புதிய பிரதமர் பொறுப்பேற்கும் வரை பதவியில் தொடரப் போவதாகவும் ட்ரூடோ அறிவித்தார். 

அவரது பதவி விலகலை தொடர்ந்து கனடாவின் புதிய பிரதமராக யார் பொறுப்பேற்றாலும் அவரின் பதவிக் காலம் விரைவில் முடிவுக்கு வரலாம் என்ற எதிர்கால சவாலை லிபரல் கட்சி எதிர்கொண்டுள்ளது.

கனடா வங்கியின் (பேங்க் ஆஃப் கனடா) முன்னாள் தலைவரான மார்க் கார்னி (mark carney) கனடாவின் அடுத்த பிரதமராக ஆகக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.

2008-ம் ஆண்டு ஏற்பட்ட சர்வதேச நிதி நெருக்கடியில் இருந்து பல நாடுகளை விட கனடா வேகமாக மீண்டதற்கு மார்க் கார்னி(mark carney) முக்கியக் காரணம் என கூறப்படுகிறது.


மிகச் சிறந்த பொருளாதார நிபுணரான கார்னி (mark carney)அரசியலில் பிரவேசித்து பிரதமராவதில் நீண்ட காலமாக ஆர்வம் கொண்டிருந்தார் என கூறப்படுகிறது. எனினும் அவருக்கு அரசியல் அனுபவம் இல்லை என்பது முக்கிய குறையாக பார்க்கப்படுகிறது.

அதேபோல் ஜஸ்டின் ட்ரூடோ அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்து கடந்த மாதம் பதவி விலகிய கிறிஸ்டினா ஃப்ரீலேண்ட் (Chrystia Freeland) புதிய பிரதமருக்கான போட்டியில் முன்னிணியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

எனினும் ஃப்ரீலாண்ட் (Chrystia Freeland) ராஜினாமா செய்த பிறகு ட்ரூடோ அவரை கடுமையாக விமர்சித்ததை சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் தமிழகத்தை பூர்விகமாகக் கொண்டவருமான அனிதா ஆனந்த் (Anita Anand) அந்நாட்டின் அடுத்த பிரதமராக பதவியேற்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இப்போதைய சூழலில் கனடா போக்குவரத்துத் துறை அமைச்சரும் லிபரல் கட்சியின் மூத்த தலைவருமான அனிதா ஆனந்த் (Anita Anand) முன்னணியில் உள்ளார். இவரது தந்தை ஆனந்த் தமிழகத்தை பூர்விகமாகக் கொண்டவர். தாய் சரோஜ் ராம் பஞ்சாபை சேர்ந்தவர் ஆவர்.

மற்றொரு சாத்தியமான வேட்பாளராக புதிய நிதி அமைச்சர் டொமினிக் லெப்லாங்க் (Dominic LeBlanc) கருதப்படுகிறது. முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் ட்ரூடோவின் நெருங்கிய நண்பருமான டொமினிக் லெப்லாங்க் (Dominic LeBlanc) சமீபத்தில் டொனால்ட் டிரம்ப் உடனான இரவு விருந்தில் ஜஸ்டின் ட்ரூடோவுடன் இணைந்து பங்கேற்றார்.

ட்ரூடோ குழந்தையாக இருந்தபோது லெப்லாங்க் (Dominic LeBlanc) ட்ரூடோவின் குழந்தை பராமரிப்பாளராக இருந்துள்ளார்.


அதேவேளை ஜனவரி 20-ம் தேதி டொனால்டு ட்ரம்ப் பதவியேற்பதற்கு முன் கனடாவின் புதிய பிரதமர் பதவியேற்பு நிகழாது என கூறப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்