உலக ரசிகர்களை அதிரவைத்த டென்னிஸ் நட்சத்திரம்
10 தை 2025 வெள்ளி 08:46 | பார்வைகள் : 222
2022 ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் போது ஹொட்டலில் தமக்கு உணவில் விஷம் கலந்து தந்ததாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் நோவக் ஜோகோவிச்.
24 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற நோவக் ஜோகோவிச்சின் விசா 2022 ஆஸ்திரேலிய ஓபன் தொடருக்கு முன்னதாக ரத்து செய்யப்பட்டது.
கொவிட் தடுப்பூசி போட மறுத்தது மற்றும் அவுஸ்திரேலியாவின் அப்போதைய கோவிட் விதிகள் தொடர்பில் பல நாட்கள் நீடித்த தொடர் விவாதங்களுக்கு மத்தியில் அவுஸ்திரேலிய அரசாங்கம் அந்த முடிவுக்கு வந்தது.
இதனையடுத்து செர்பிய நாட்டவரான நோவக் ஜோகோவிச் மெல்போர்ன் ஹொட்டல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டார். அப்போது அந்த ஹொட்டலில் புகலிடக்கோரிக்கையாளர்கள் பலர் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், குறித்த ஹொட்டலில் தமக்கு அளிக்கப்பட்ட உணவில் விஷம் கலந்திருந்ததாக நோவக் ஜோகோவிச் புதிய பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளார். செர்பியா திரும்பியதன் பின்னர் தமது உடலில் உலோக அளவு மிக மிக அதிகமாக இருந்ததை தாம் உணர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதை அப்போது வெளிப்படையாக எவரிடமும் தாம் பகிர்ந்துகொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் மிக மோசமாக பாதிக்கப்பட்டு ஐரோப்பா திரும்பியதாகவும், அவசர மருத்துவக் குழு தமக்கு பலமுறை சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது என்றும் வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால் நோவக் ஜோகோவிச் முன்வைத்துள்ள இந்த குற்றச்சாட்டுகளுக்கு அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சகம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.