Paristamil Navigation Paristamil advert login

எல்லையில் வேலி அமைக்க எதிர்ப்பு: இந்திய துாதருக்கு வங்கதேசம் சம்மன்

எல்லையில் வேலி அமைக்க எதிர்ப்பு: இந்திய துாதருக்கு வங்கதேசம் சம்மன்

13 தை 2025 திங்கள் 04:31 | பார்வைகள் : 394


வங்கதேச எல்லையில் இந்தியா வேலி அமைப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதை அடுத்து, அந்நாட்டுக்கான இந்திய துாதருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியா - வங்கதேசம், 4,096 கி.மீ., நீளம் உடைய எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இது, உலக அளவில், 5வது அதிக நீளமுள்ள எல்லையாக கருதப்படுகிறது.

வங்கதேசத்தில் இருந்து எல்லை வழியாக நம் பகுதிக்குள் ஊடுருவல், கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் நடப்பதை கட்டுப்படுத்த, முள்வேலி அமைக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டது.

எல்லையில் இருதரப்பு ஒப்புதல் இன்றி கட்டமைப்பு பணிகளை நிறைவேற்றக்கூடாது என, இருநாட்டுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இருப்பதால், வங்கதேசம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

45 நிமிடங்கள்


இது தொடர்பாக நேரில் ஆஜராக விளக்கம் அளிக்கும்படி, வங்கதேசத்திற்கான இந்திய துாதர் பிரனய் வர்மாவுக்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியது.


இதையடுத்து, நேற்று மாலை 3:00 மணிக்கு, வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் வர்மா ஆஜரானார். அங்கு, இடைக்கால அரசின் வெளியுறவு செயலர் ஜஷிம் உதினை சந்தித்து விளக்கம் அளித்தார். இந்த சந்திப்பு, 45 நிமிடங்கள் நீடித்தது.

அதன் பின் செய்தியாளர்களிடம் பிரனய் வர்மா கூறியதாவது:

குற்றமற்ற எல்லையை உறுதி செய்யும் இந்தியாவின் நோக்கம் குறித்து, இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது. எல்லையில் வேலி அமைப்பது தொடர்பாக ஒப்பந்தம் இருப்பதால், எல்லையில் ஊடுருவல், கடத்தல் உள்ளிட்ட சவால்களை கையாள்வது குறித்து விவாதித்தோம்.

தகவல் தொடர்பு


இருதரப்புக்கு இடையிலான புரிந்துணர்வுகள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், குற்றங்களுக்கு எதிரான கூட்டு அணுகுமுறை இருக்கும் என்றும், நாங்கள் எதிர்பார்க்கிறோம். இது தொடர்பாக, இரு நாட்டு எல்லை பாதுகாப்பு படைகளுக்கு இடையே தகவல் தொடர்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்திப்பு தொடர்பாக வங்கதேச இடைக்கால அரசு தரப்பில் இருந்து அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

எழுத்துரு விளம்பரங்கள்