Paristamil Navigation Paristamil advert login

உ.பி.யில் ‛‛மஹா கும்பமேளா''ஆன்மிகத் திருவிழா துவங்கியது!

உ.பி.யில் ‛‛மஹா கும்பமேளா''ஆன்மிகத் திருவிழா துவங்கியது!

14 தை 2025 செவ்வாய் 05:11 | பார்வைகள் : 634


உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில், மஹா கும்பமேளா என்ற மிகப் பெரும் ஆன்மிகத் திருவிழா நேற்று துவங்கியது. முதல் நாளிலேயே, 1.50 கோடி பக்தர்கள் திரண்டு புனித நீராடினர். மஹா கும்பமேளாவுக்காக, பல தொழில்நுட்ப பாதுகாப்புகளுடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள பிரயாக்ராஜ், கங்கை, யமுனை மற்றும் புராணங்களில் கூறப்படும் சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் இடம்.

திரிவேணி சங்கமம் எனப்படும் இங்கு புனித நீராடுவது, மோட்சத்துக்கான வழியாகவும், பாவங்களை அழிப்பதாகவும் கருதப்படுகிறது.

இந்நிலையில், இங்கு மஹா கும்பமேளா எனப்படும் ஹிந்து மதத்தின் மிகப் பெரும் ஆன்மிகத் திருவிழா நேற்று துவங்கியது. வரும் பிப்., 26ம் தேதி வரை, 45 நாட்களுக்கு மஹா கும்பமேளா நடக்க உள்ளது.

இதில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து, 40 கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தரகண்டின் ஹரித்வார், உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ், மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன், மஹாராஷ்டிராவின் நாசிக் ஆகிய நான்கு இடங்களில், கும்பமேளாக்கள் வழக்கமாக நடக்கும்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது கும்பமேளா என்றும், ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது அர்த்த கும்பமேளா என்றும், 12 ஆண்டு களுக்கு ஒரு முறை நடப்பது பூர்ண கும்பமேளா என்றும், 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது மஹா கும்பமேளா என்றும் அழைக்கப்படுகின்றன.

சிறப்பான கோள் சேர்க்கை


சூரியன், சந்திரன், வியாழன் மற்றும் சனி ஆகிய நான்கு கோள்களும் ஒரே நேர்கோட்டில் அமைவதுதான், மஹா கும்பமேளா என்று அழைக்கப்படுகிறது. அதாவது, 12 பூர்ண கும்பமேளாக்களின் நிறைவாக மஹா கும்பமேளா பார்க்கப்படுகிறது.

இந்தாண்டில், இந்த நான்கு கோள்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளதுடன், மங்களகரமானதாக கருதப்படும் புஷ்ய நட்சத்திரத்தில் மஹா கும்பமேளா துவங்கியுள்ளது. அதனால், இந்த ஆண்டு மஹா கும்பமேளா மேலும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

கடும் குளிர், பனிப்பொழிவு மூட்டம் அதிகமாக இருந்த நிலையிலும், நேற்று அதிகாலையில் மஹா கும்பமேளா துவங்கியதும், திரிவேணி சங்கமத்தில் மக்கள் புனித நீராடத் துவங்கினர்.

நேற்று காலை 9:30 மணி நிலவரப்படி, 60 லட்சம் பக்தர்கள் புனித நீராடியதாக உத்தர பிரதேச அரசு கூறியுள்ளது.

'ஜெய் ஸ்ரீராம், ஹரஹர மஹாதேவ், ஜெய் கங்கே மய்யா' என்ற கோஷங்களுடன் மக்கள் உணர்வுப்பூர்வமாக புனித நீராடினர். குழுக்களாகச் சென்று, பல வெளிநாடுகள் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் புனித நீராடினர். புனித நீராடுவதற்கு மக்கள் செல்வதற்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

'பாரதத்தின் மதிப்புகள், கலாசாரம், பாரம்பரியத்தை மதிக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு மிகச் சிறந்த நாளான கும்பமேளா துவங்கியுள்ளது. நம்பிக்கைகள், பக்தி, கலாசாரத்தின் புனித சங்கமமாக இந்த விழா அமைந்துள்ளது.

இந்தத் திருவிழா நம் நாட்டின் ஆன்மிக பாரம்பரியம், நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தை போற்றுவதாக உள்ளது' என, பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

'கலாசாரத்தின் சங்கமம் எங்கு நடக்கிறதோ அங்கு நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தின் சங்கமமும் நடக்கும். அந்த வகையில், வேற்றுமையில் ஒற்றுமை என்பதை பறை சாற்றும் வகையில் மஹா கும்பமேளா அமைந்துள்ளது.

'சனாதன தர்மத்தின் வாயிலாக, மனித குலத்தின் நன்மையை பிரயாக்ராஜ் வழங்குகிறது' என, முதல்வர் யோகி ஆதித்யநாத், சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மொத்தம், 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில், மஹா கும்ப நகர் அமைந்துள்ளது. ஒரே நேரத்தில் ஒரு கோடி பேர் வரை தங்கும் வசதி இங்கு செய்யப்பட்டுள்ளது. இது உலகிலேயே மிகப் பெரிய தற்காலிக நகராக அமைந்துள்ளது.

துாய்மைப் பணிகள், குடிநீர் வசதி, போக்குவரத்து, பாதுகாப்புப் பணிகள் என, உத்தர பிரதேச அரசு விரிவான ஏற்பாடுகள் செய்துள்ளது. தொழில்நுட்ப வசதிகள் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளன.

நதியினுள் ட்ரோன்


இந்த நகரில் மட்டும், 55 தற்காலிக போலீஸ் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில், 45 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நதிகளின் மீது மக்கள் செல்வதற்காக, 30 தற்காலிக பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தண்ணீருக்கு அடியிலும் இயங்கக் கூடிய, ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதைத் தவிர, மஹா கும்பமேளா நகர் தொடர்பான வரைபடங்கள், பெரிய டிஜிட்டல் திரைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மின்சார விளக்குக்கும், தனித்தனியாக, க்யூ.ஆர்., கோடு வழங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, தங்களுடைய இடத்தில் மின்சார விளக்கு எரியாத பட்சத்தில், தங்கியிருக்கும் யாத்ரீகர்கள் புகார் அளித்தால், உடனடியாக சரி செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

சிசிடிவி கேமராக்கள் வாயிலாக மஹா கும்பமேளா நகர் முழுமையாக கண்காணிக்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்