Paristamil Navigation Paristamil advert login

இண்டியா கூட்டணியில் விரிசல் விஸ்வரூபம்: கெஜ்ரிவால் ராகுல் விமர்சனம்

இண்டியா கூட்டணியில் விரிசல் விஸ்வரூபம்: கெஜ்ரிவால்  ராகுல் விமர்சனம்

14 தை 2025 செவ்வாய் 05:17 | பார்வைகள் : 360


பொய்யான வாக்குறுதிகளை கெஜ்ரிவால் அறிவிக்கிறார். அவர் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து எந்த வார்த்தையும் பேசவில்லை என காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் விமர்சனம் செய்து உள்ளார்.

இண்டியா கூட்டணியில் முக்கிய தலைமை, முக்கிய கட்சி அல்லது எதிர்கால உத்திக்கான திட்டங்கள் குறித்து எந்த தெளிவும் இல்லை. இந்த கூட்டணி தொடரும் என்பதிலும் தெளிவில்லை என ஜம்மு காஷ்மீர் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சித் தலைவருமான உமர் அப்துல்லா கூறியிருந்தார். ஏற்கனவே டில்லி சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மியும், காங்கிரசும் தனித்து போட்டியிடுகிறது. கூட்டணி கட்சியினர் ஆதரவு கெஜ்ரிவாலுக்கே அதிகம் உள்ளது.

இந்நிலையில், வடகிழக்கு டில்லியின் சீலம்பூரில், தேர்தல் பிரசாரத்தில் ராகுல் பேசியதாவது: ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பொய்யான வாக்குறுதிகளை அளிக்கிறார். நாங்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி வருகிறோம். ஆனால் பிரதமர் மோடியும், அரவிந்த் கெஜ்ரிவாலும் இது குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மக்கள் கேட்கிறார்கள். இதுகுறித்து கெஜ்ரிவால் ஒரு வார்த்தை கூட பேசாமல் மவுனம் காக்கிறார் . பிரதமர் மோடிக்கும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. பிரதமர் மோடியும், கெஜ்ரிவாலும் பண வீக்கத்தை குறைப்பதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால் இது தோல்வியில் முடிந்தது. ஏழைகள் ஏழைகளாகவே இருக்கிறார்கள். பணக்காரர்கள் அதிக பணத்தை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு உரிய உரிமை கிடைப்பதை பிரதமர் மோடியும், கெஜ்ரிவாலும் விரும்பவில்லை. டில்லியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் இடஒதுக்கீடு உச்சவரம்பை உயர்த்தும்.கெஜ்ரிவால் அதானியைப் பற்றி எப்போதாவது பேசியிருக்கிறாரா? நாட்டை ஒரு தொழிலதிபர் நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று நான் தெளிவாக பேசுகிறேன். கெஜ்ரிவால் தேசிய தலைநகரை பாரிஸாக மாற்றுவதாக உறுதியளித்தார்.

மாறாக ஊழல், மாசுபாடு மற்றும் பணவீக்கம் அதிகரித்துள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை அகற்றுவோம். பொய்யான வாக்குறுதிகளை அளித்து கெஜ்ரிவால் மக்களை ஏமாற்றி வருகிறார். நாட்டில் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையே போர் நடந்து வருகிறது. அரசியலமைப்பை பாதுகாப்பதில் உறுதியாக நின்றவர் மற்றும் மற்றொருவர் அதை அழிப்பவர். இவ்வாறு ராகுல் பேசினார்.

கெஜ்ரிவால் பதிலடி

இது குறித்து சமூக வலை தளத்தில், அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராகுல் டில்லிக்கு வந்து என்னை மிகவும் அவதூறாக பேசினார். ஆனால் அவரது பேச்சுக்கள் குறித்து நான் கருத்து சொல்ல மாட்டேன். காங்கிரசை காப்பாற்ற அவரது போராட்டம், நாட்டை காப்பாற்ற எனது போராட்டம். இவ்வாறு கெஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்