டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்கள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றது
24 தை 2025 வெள்ளி 03:22 | பார்வைகள் : 199
உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை அருகே அமைய இருந்த டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கான ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அனைத்து கட்சிகளும் இத்திட்டத்துக்கு எதிராக குரல் எழுப்பின. தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பிரிவு மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது. இதையடுத்து, சுரங்கத்துக்கான ஏலத்தை ரத்து செய்வது என்ற முடிவை எடுத்துள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலுார் அரிட்டாபட்டியை பல்லுயிர் தளமாக தமிழக அரசு 2022ல் அறிவித்தது. 2024 நவம்பரில் இந்த பகுதியில் வேதாந்தா நிறுவனம் சார்பில் டங்ஸ்டன் சுரங்கம் தோண்ட உள்ளதாகவும், அதற்கான டெண்டர் வழங்கப்பட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.
பிரச்னைக்கு தீர்வு
இதையடுத்து, சுரங்கத் திட்டத்தையும், அதற்கான டெண்டரையும் ரத்து செய்யக் கோரி மேலுார் மக்கள், விவசாயிகள், அரசியல் கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தினர். திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என சட்டசபையில் தமிழக அரசு உறுதியளித்தது.
எனினும், டெண்டரை ரத்து செய்யும் அதிகாரம் மத்திய அரசிடம் இருந்ததால் விவசாயிகள், அப்பகுதி மக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, அரிட்டாபட்டி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஊர் தலைவர்களை அழைத்துக் கொண்டு, நேற்று முன்தினம் டில்லியில் மத்திய சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை நேரில் சந்தித்துபேசினார்.
மத்திய இணையமைச்சர் முருகன் மற்றும் தமிழக பா.ஜ., பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பொதுச்செயலர் ராம சீனிவாசன் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். இந்த சந்திப்பிற்கு பின், நிருபர்களிடம் அண்ணாமலை கூறுகையில்,'டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட மாட்டாது என்ற வாக்குறுதியை அமைச்சர் அளித்துஉள்ளார்.
'பிரதமரிடம் ஆலோசித்து விட்டு இதுகுறித்த அதிகாரப்பூர்வமான மகிழ்ச்சி செய்தியை மத்திய அரசு வெளியிடும்' என்று கூறியிருந்தார்.அண்ணாமலை கூறியது போலவே சுரங்கத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 22ம் தேதி அன்று நடந்த சந்திப்பின்போது, நாயக்கர்பட்டி டங்ஸ்டன் பிளாக் ஏலத்தை ரத்து செய்யும்படி அப்பகுதியை சேர்ந்த ஊர் தலைவர்கள், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் கோரிக்கை விடுத்தனர். 'பயோ டைவர்சிட்டி ெஹரிடேஜ் சைட்' எனப்படும், பல்லுயிர்பாரம்பரிய பாதுகாப்பு பகுதி, அந்த டங்ஸ்டன் கனிம பிளாக் இடத்திற்குள்
வருவதை விளக்கி கூறினர்.
குழுவினர் கூறிய தகவல்களை பொறுமையாக கேட்டறிந்த மத்திய அமைச்சர், அவர்களது கோரிக்கைக்கும், பல்லுயிர் பாரம்பரிய பாதுகாப்பு பகுதிக்கும் மத்திய அரசு முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். பிரதமர் மோடியிடம் விவரங்களை தெரிவித்து ஒப்புதல் பெற்று டெண்டரை ரத்து செய்வதாக அமைச்சர் உறுதி அளித்தார்.
இந்த விஷயம் குறித்து நடந்த விரிவான ஆலோசனைக்கு பின், அந்த பகுதியில் காணப்படும் பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவத்தையும், பாரம்பரிய தன்மைகளையும் பாதுகாக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. இந்த விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழான மத்திய அரசு உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. இதன் காரணமாக டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலத்தை ரத்து செய்வது என மத்திய சுரங்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, டில்லி சென்ற ஏழு விவசாயிகளும் இன்று காலை 10:00 மணிக்கு மதுரைக்கு விமானம் மூலம் வருகின்றனர். இதுகுறித்து டில்லியில் இருந்து பேசிய அ.வல்லாளப்பட்டி ஆனந்த் கூறுகையில், ''மத்திய அரசு டெண்டரை ரத்து செய்தது சந்தோஷம். இது டெண்டரை ரத்து செய்ய போராடிய அனைவருக்கும் கிடைத்த வெற்றி,'' என்றார்.
48 கிராமத்துக்கும் பாதுகாப்பு தேவை: பி.ஆர். பாண்டியன்
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பிஆர்.பாண்டியன் கூறியதாவது: பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் பெருக்க மேம்பாட்டு பகுதியில் மட்டும் திட்டத்தை கைவிட ஏற்றுக் கொண்டதாக மத்திய அரசின் செய்தி குறிப்பில் இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே தமிழக அரசு நாயக்கர்பட்டி உள்ளிட்ட இரண்டு கிராமங்களை மட்டும் பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் பெருக்க மேம்பாட்டு மண்டலமாக அறிவித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு சந்தேகத்தை எழுப்புகிறது. ஒட்டுமொத்தமாக 48 கிராமங்களிலும் இத்திட்டம் கைவிடப்பட வேண்டும் எனறு மக்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே, தமிழக அரசு இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். நில நிர்வாக முறை தமிழக அரசின் கையில் இருப்பதால் மக்களின் போராட்டத்தை ஏற்று 48 கிராமங்களையும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.