Paristamil Navigation Paristamil advert login

Saint-Ouen இல் ஒரு சந்தை! - புதுவித சொப்பிங் அனுபவம்!!

Saint-Ouen இல் ஒரு சந்தை! - புதுவித சொப்பிங் அனுபவம்!!

14 பங்குனி 2018 புதன் 10:30 | பார்வைகள் : 18580


பரிசில் வாழ்ந்தால் மட்டும் போதாது... ஒரு முழுநேர 'பரிசிய'னாகவும் வாழவேண்டும். பரிசில் உள்ள ஒரு சந்தை உங்களுக்கு அவ்வாறான ஒரு உணர்வை தரும்.. சில நூறு யூரோக்களை பொக்கட்டுக்குள் திணித்துக்கொண்டு புறப்படுங்கள்...!! 
 
flea சந்தை எனவும்,  Marché aux Puces de Saint-Ouen சந்தை எனவும் இதற்கு இரண்டு பெயர்கள் உண்டு. மெற்றோ 4'இல் ஏறி Porte de Clignancourt நிலையத்தில் இறங்கி, Marché aux Puces வழியாக வெளியேறுங்கள். 
 
 சில போலியான தரம் குறைவான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் அங்கு உண்டு. அதை கண்டுகொள்ளாமல் KFC இருக்கும் பகுதியை நோக்கி விறு விறுவென நடையை கட்டுங்கள். எதிரே ஒரு மேம்பாலம் தென்படும். அதை கடந்தால் பல்வேறு பெயர்கள் கொண்ட பச்சை நிற பதாகை தென்படும். அதில்  aux Puces பெயர் காட்டும் திசையில் சென்றால் முப்பது நொடிகளில் வந்துவிடும் சந்தை!! 
 
உங்களுக்கு சில இலவச ஆலோசனைகள் உண்டு. முதலில் எக்காரணம் கொண்டும் பொது இடத்தில் பணத்தை எண்ணவோ, ஜீன்சின் பின் பக்கம் வொலட்டை வைத்துவிட்டு சாவகாசமாய் நடக்கவோ கூடாது. கண்மூடி கண் திறப்பதற்குள் காணாமல் போய்விடும் உங்கள் வொலட்! முடிந்தவரை பிரெஞ்சில் கதையுங்கள்.. அல்லது மெளன விரதமே பெட்டர்! சுருக்கமாய் சொல்வதென்றால் திருடர்களின் கூடாரம் அது. உஷார்!!
 
சந்தையில் முதலில் வருவது ஹாண்ட்பேக், கைக்கடிகாரம், மணி பர்ஸ் முதலியன விற்பனை செய்யப்படும் கடைகள்.. அவை முன்னதாக எங்கேயும் திருடப்பட்டவையாக இருக்கும் என்பது உறுதி. கடந்து உள்ளே சென்றால்,
 
பழைய பொருட்கள் விற்பனை செய்யப்பும் ஒரு கடை முதலில் தெரியும். பழைய கருவிகள், பழைய ஆடைகள், ஃபிரேம் போடப்பட்ட பழைய புகைப்படங்கள்.. என அனைத்தும் பழையன. பாருங்கள்.. எதுவும் தேவைப்படாத பட்சத்தில் தொடர்ந்து முன்னேறுங்கள்.. 
 
நில்லுங்கள்... உங்களுக்கு ஒவ்வொரு கடையாக விபரிக்கப்போவதில்லை. இங்கு மொத்தம் 15 சந்தைகள் உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். 17 ஆம் நூற்றாண்டைச் சேந்த பொருட்கள் விற்பனை செய்வதற்கு கூட ஒரு கடைத்தொகுதி உண்டு. நீங்களே நேரில் சென்று பார்வையிடுங்கள்.  
 
பழைய புத்தகங்கள்.. அடடா.. அதை குறிப்பிட மறந்துவிட்டோமே.. ஆங்கிலம் பிரெஞ்சு இரு மொழி புத்தகங்களும் இங்கு அரை அல்லது குறை விலையில் கிடைக்கும். பாதிக்கு மேல் ஒருதடவை வாசிக்கப்பட்ட புத்தகங்களாகத்தான் இருக்கும். கிட்டத்தட்ட அனைத்து தலைப்பிலான புத்தகங்களும் இங்கு கிடைக்கின்றன. 
 
முகவரியை ஒருதடவை சரி பார்த்துக்கொள்ளுங்கள். 
 
Marché aux Puces de Saint-Ouen (Les Puces)
தகவல் நிலையம்: 7 Impasse Simon, 93400 Saint Ouen.
 
சந்தைகள்: 
Avenue Michelet, 
Rue Jean Henri Fabre,
Avenue Gabriel Péri,
Rue des Rosiers.
 
வெளியூர் காரராக சொப்பிங் செய்யாமல், உள்ளூர் வாசி போல் குறைந்த விலையில் பேரம் பேசி பொருட்கள் வாங்கிச் செல்வதும் ஒரு சந்தோசம் தான் இல்லையா?? ஒரு வார இறு நாளில் சென்று வாருங்களேன்!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்