5,8 ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி திட்டம் ரத்து

24 மார்கழி 2024 செவ்வாய் 02:42 | பார்வைகள் : 2438
மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில், ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் பாஸ் ஆக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பள்ளி கல்வி கொள்கையில், மத்திய அரசு இந்த திடீர் மாற்றத்தை செய்துள்ளது.
அனைவருக்கும் கல்வி வழங்கும் நோக்கோடு, கல்வி உரிமை சட்டம் 2009ல் அமல்படுத்தப்பட்டது. இதன்படி, குறைந்தபட்சம் துவக்க கல்வி கிடைக்கும் வகையில், எட்டாம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களையும் பாஸ் ஆக்கும் நடைமுறை 2019ல் உருவாக்கப்பட்டது.
அரசாணை
ஆனால், 16 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்கள் இந்த திட்டத்தை கைவிட்டன. பள்ளிகளில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், மீண்டும் அதே வகுப்பில் படிக்கும் நடைமுறையை, இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கடைப்பிடித்து வருகின்றன.
ஆனால், மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில், அனைவருக்கும் பாஸ் திட்டமே நடைமுறையில் இருந்தது. இந்நிலையில், இந்த கொள்கையில் மத்திய அரசு திடீர் மாற்றம் செய்துள்ளது.
அனைவரையும் பாஸ் ஆக்கும் திட்டத்தை ரத்து செய்து அரசாணை நேற்று வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் படிக்கும் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள், ஆண்டு இறுதித் தேர்வில் தோல்வி அடைந்தால், அவர்கள் அதே வகுப்பில் தொடர வேண்டும்.
ஆலோசனை
அதே நேரத்தில், இரண்டு மாதங்களுக்குள் அவர்களுக்கு மறுதேர்வு வாய்ப்பு தரப்பட வேண்டும். அதிலும் தேர்ச்சி பெறாவிட்டால், அவர்கள் தொடர்ந்து அதே வகுப்பிலேயே தொடர வேண்டும்.
ஆண்டு இறுதித் தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு, தேவைப்பட்டால் பள்ளிகள் ஆலோசனை வழங்க வேண்டும். எந்தெந்த பாடத்தில், அந்த குறிப்பிட்ட மாணவர் பின்தங்கியுள்ளார் என்பதை சுட்டிக்காட்டி, மேம்படுத்துவதற்கு தேவையான பயிற்சிகளையும் அளிக்கலாம்.
எந்த நிலையிலும் தேர்வில் தேர்ச்சி பெறாத எந்த ஒரு மாணவரையும், பள்ளியில் இருந்து நீக்கக் கூடாது. குறைந்தபட்சம் துவக்க கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இந்த புதிய நடைமுறை, கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா மற்றும் சைனிக் பள்ளிகள் என, மத்திய அரசு நடத்தும் 3,000 பள்ளிகளுக்கு பொருந்தும்.
ஏற்கனவே, 16 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்கள், அனைவரும் பாஸ் என்ற
நடைமுறையை பின்பற்றவில்லை. ஹரியானா மற்றும் புதுச்சேரி இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. மீதமுள்ள மாநிலங்கள், அனைவரும் பாஸ் என்ற நடைமுறையை பின்பற்றுகின்றன.
கல்வி என்பது மாநிலங்களின் கட்டுப்பாட்டில் வருகிறது. அதனால், அனைவரும் பாஸ் என்ற நடைமுறையை கைவிடுவது தொடர்பாக, அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எப்படி?
இது குறித்து, தமிழக பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழக அரசு இதுவரை தேசிய கல்வி கொள்கையை ஏற்கவில்லை. அதனால், தமிழகத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறை தான் தொடரும். மேலும், தமிழகத்துக்காக புதிய கல்வி கொள்கையை அறிமுகப்படுத்தும் வகையில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
அக்குழு, பல்வேறு செயல் திட்டங்களை அரசுக்கு வழங்கியுள்ளது. அது குறித்து பரிசீலித்து, அரசு தான் கொள்கை முடிவு எடுக்கும். அதனால், அதிகாரிகள் மட்டத்திலிருந்து இதற்கு பதில் அளிக்க இயலாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
திறன் மேம்படும்
மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடனேயே, அனைவரையும் பாஸ் ஆக்கும் திட்டம் ரத்து செய்யப்படுகிறது. இது, மாணவர்கள் சிறந்த முறையில் பாடங்களை கற்றுக் கொள்வதற்கு உதவும். - சஞ்சய் குமார்
செயலர், மத்திய பள்ளி கல்வித்துறை