பொங்கல் பரிசு தொகுப்பு மூன்றாக பிரிப்பு? நிதி நெருக்கடியை சமாளிக்க அரசு திட்டம்!
24 மார்கழி 2024 செவ்வாய் 02:51 | பார்வைகள் : 186
பொங்கல் பரிசு தொகுப்பை மூன்றாக பிரித்து வழங்குவது தொடர்பான ஆலோசனையில் அரசு இறங்கியுள்ளது.
தமிழக அரசு வாயிலாக, ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 1,000 ரூபாய் ரொக்கப் பணத்துடன் பச்சரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக, 2.20 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயன் பெற்று வருகின்றனர். இதற்கு, 2,500 கோடி ரூபாய் வரை அரசு செலவிடுகிறது.
அனைத்து மத மக்களும் தமிழர் பண்டிகையான பொங்கலை கொண்டாடும் வகையில், பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகை காலங்களில், 1,000 ரூபாய் ரொக்க பரிசு வழங்கினால், அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.
எனவே, பொங்கல் பரிசு தொகுப்பை, மூன்றாக பிரித்து கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகை காலங்களில் வழங்கலாம் என்ற யோசனை அரசுக்கு எழுந்துள்ளது. இது தொடர்பாக, முதற்கட்ட ஆலோசனை நிதித்துறையில் நடந்து வருகிறது.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு, ஒரே நேரத்தில் நிதி ஒதுக்குவதால், அரசுக்கும் நெருக்கடி ஏற்படுகிறது. எனவே, மூன்றாக பிரித்து நிதி ஒதுக்கீடு செய்தால், நெருக்கடியை அரசால் ஓரளவிற்கு சமாளிக்க முடியும்; மூன்று மதத்தினரையும் திருப்திப்படுத்த முடியும்.
எனவே, இது தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து, அதற்கேற்ப அரசு முடிவெடுக்கவுள்ளது. மத தலைவர்களின் கருத்துக்களை பெற்று, அதன் அடிப்படையில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிவிப்பை, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வாய்ப்புள்ளது.
அதே நேரத்தில், வரும் 2025ம் ஆண்டு வழக்கம் போல பொங்கல் பரிசு தொகுப்பு அனைவருக்கும் வழங்கப்பட உள்ளது.