அவதானம்.. வாகன இலக்கத்தகடு திருடப்படலாம்.. !!
25 மார்கழி 2024 புதன் 07:00 | பார்வைகள் : 1551
பிரான்சில் வாகன இலக்கத்தடுகள் திருடப்படுவது அதிகரித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் மட்டும் 22,008 இலக்கத்தகடுகள் திருடப்பட்டுள்ளன.
பிரான்சில் இந்த வகை திருட்டுக்கள் அதிகரித்து பணம் கொழிக்கும் தொழிலாக மாறியுள்ளது. போக்குவரத்து விதிமீறல்களில் இருந்து தப்பிக்கவும், குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் தங்களது வாகனங்களுக்கும் இந்த இலக்கத்தகடை பயன்படுத்துகின்றனர்.
போக்குவரத்து விதி மீறல்களை மூன்றாம் நபரின் இலக்கத்தட்டை பயன்படுத்தி மேற்கொள்ளுவதால், அதன் உரிமையாளருக்கு குற்றப்பணம் அறவிடப்படும். கடந்த வருடங்களில் இது போல் பல்லாயிரக்கணக்கான முறைப்பாடுகள் எழுந்துள்ளன.
வேறு ஒரு வாகனத்துக்காக பதிவுசெய்யப்பட்ட இலக்கத்தகடை வாகனங்களில் பயன்படுத்தினால், அது 30,0000 யூரோக்கள் குற்றப்பணமும், 7 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்குமுரிய குற்றமாகும்.
அதேவேளை, 2022 ஆம் ஆண்டில் முந்தைய ஆண்டை விட 60% சதவீதத்தால் இந்த இலக்கத்தகடு திருட்டு அதிகரித்துள்ளது.
இதில் இருந்து நீங்கள் தப்பித்துக்கொள்ள, வாகன இலக்கத்தகடு திருடப்பட்டிருந்தால் உடனடியாக காவல்துறையினரிடம் புகார் அளித்து, உங்கள் இலக்கத்தட்டினை “Fichier des véhicules volés (FVV) எனும் கோப்பில் இணைக்க வேண்டும். அதன் பின்னர் உங்களுக்கு குற்றப்பணம் அறவிடப்படமாட்டாது.
அதன் பின்னர் l’Agence nationale des titres sécurisés (ANTS) அலுவலகத்தின் இணையத்தளத்தில் புதிய இலக்கத்தகட்டுக்கான கோரிக்கையை வைக்க வேண்டும்.
இது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.