வங்கதேசத்துடன் வர்த்தக உறவை நிறுத்த டில்லி விற்பனையாளர்கள் முடிவு
25 மார்கழி 2024 புதன் 05:36 | பார்வைகள் : 166
ஹிந்துக்கள் மீதான தாக்குதல்களால், டில்லியின் வாகன உதிரி பாக விற்பனையாளர்கள் வங்கதேசத்துடனான வணிகத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தை அடுத்து, ஆக., 5ல் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த, அவாமி லீக் கட்சித் தலைவர் ஷேக் ஹசீனா நம் நாட்டுக்கு தப்பினார். இதையடுத்து, இடைக்கால அரசு முகமது யூனுஸ் தலைமையில் பதவியேற்றது.
இதை தொடர்ந்து, வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீது தாக்குதல் மற்றும் ஹிந்து கோவில்கள் சூறையாடப்படும் சம்பவங்கள் நடப்பது அதிகரித்துள்ளது. இந்நிலையில், இன்று (டிச.,25) ஹிந்துக்கள் மீதான தாக்குதல்களால், டில்லியின் வாகன உதிரி பாக விற்பனையாளர்கள் வங்கதேசத்துடனான வணிகத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து, டில்லி வாகன உதிரி பாக வியாபாரிகள் சங்கத் தலைவர் வினய் நரங் கூறியதாவது: வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு நடந்த கொடுமைகள், நமது கோவில்கள் அழிக்கப்பட்டு, பல ஹிந்து சகோதரர்கள் கொல்லப்பட்டது தவறு. இதனால், வங்க தேசத்துடனான வணிகத்தை நிறுத்த முடிவு செய்துள்ளோம்.
வங்கதேசம் வளரும் நாடு. கார் உதிரி பாகங்கள் கிடைக்கவில்லை என்றால் போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதை அவர்கள் உணர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். வரும் 2025ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி வரை, வணிக தொடர்பை நிறுத்த முடிவு செய்துள்ளோம். தேவைப்பட்டால் இதை தொடருவோம். இவ்வாறு அவர் கூறினார்.