Paristamil Navigation Paristamil advert login

தேர்தல் விதியை மத்திய அரசு மாற்றியதை.. ரத்து செய்க ! காங்கிரஸ்

தேர்தல் விதியை மத்திய அரசு மாற்றியதை.. ரத்து செய்க ! காங்கிரஸ்

25 மார்கழி 2024 புதன் 05:40 | பார்வைகள் : 174


தேர்தல் நடத்தை விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்தது தில்லுமுல்லுக்கு வழிவகுக்கும் என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.

தேர்தல் சம்பந்தமான அனைத்து தகவல்கள், ஆவணங்கள், வீடியோ பதிவுகளையும் பொதுமக்கள் பார்வையிட தேர்தல் நடத்தை விதி அனுமதிக்கிறது.

தேர்தல் நடைமுறை முற்றிலும் வெளிப்படையாக இருந்தால் மட்டுமே, தேர்தல் மீது வாக்காளர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் என்பதால், 1961ம் ஆண்டு இந்த விதிகள் உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தன.

அத்துடன், கட்சிகளோ வேட்பாளர்களோ அல்லது தேர்தல் பணியில் ஈடுபடும் லட்சக்கணக்கான அதிகாரிகளோ முறைகேடு செய்யாமல் தடுக்கவும், இந்த வெளிப்படைத்தன்மை உதவும் என, அப்போது இருந்த தேர்தல் கமிஷன், அரசுக்கு வலியுறுத்தி இருந்தது.

அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, எந்த பிரச்னையும் இல்லாமல், இந்த விதிகள் அமல் செய்யப்பட்டன.

சமீபத்தில் நடந்த ஹரியானா சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த ஒரு வேட்பாளர், தன் தொகுதியின் சில சாவடிகளில் நடந்த ஓட்டுப்பதிவு ஆவணங்களையும், வீடியோ பதிவையும் கேட்டார்; தேர்தல் கமிஷன் தர மறுத்தது; அவர் கோர்ட்டை நாடினார்.

தேர்தல் நடத்தை விதிகள் அனுமதிப்பதால், மனுதாரர் கேட்கும் ஆவணங்களையும், வீடியோ காட்சிகளையும் கொடுத்தாக வேண்டும் என, ஐகோர்ட் உத்தரவிட்டது.

இதையடுத்து தேர்தல் கமிஷனை மத்திய அரசுக்கு அவசர பரிந்துரை அனுப்பியது. அதை ஏற்று, மத்திய அரசு, 1961ம் ஆண்டு 'தேர்தல் நடத்தை விதிகள் சட்ட விதி - 93-2 - ஏ'யில் உடனே திருத்தம் செய்து, கடந்த வெள்ளிக்கிழமை அரசாணை பிறப்பித்தது.

எல்லா ஆவணங்களையும்' என்பதற்கு பதிலாக, 'விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை' என திருத்தி எழுதியுள்ளது.

இதனால், ஓட்டு எண்ணிக்கை நடக்கும்போது ஒவ்வொரு மணி நேரத்துக்கும் சொல்லப்பட்ட எண்ணிக்கைக்கும், கடைசியில் அறிவிக்கப்படும் இறுதி எண்ணிக்கைக்கும் இடையே, முரண்பாடுகள் நேரும்போது, தேர்தல் அதிகாரி அதற்கு என்ன காரணம் அல்லது விளக்கம் கொடுத்தார் என்பது போன்ற முக்கியமான தகவல்களை, பொதுமக்கள் இனிமேல் அறிந்து கொள்ள முடியாது.

இது, இந்திய தேர்தலின் அடிப்படை பலமான வெளிப்படைத் தன்மையை சிதைத்துவிடும் என, ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

ஆனால், இந்த கட்டுப்பாடு விதிக்காவிட்டால் ஓட்டு போடுபவர்கள் குறித்த ரகசியத்தை காக்க முடியாமல் போகும்; அதனால் காஷ்மீர் போன்ற, 'சென்சிடிவ் ஏரியா'க்களில் மோசமான விளைவு ஏற்படும் என்று, தேர்தல் கமிஷன் சொல்கிறது.

வீடியோ காட்சிகள், மின்னணு ஆவணங்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, முற்றிலும் வேறுமாதிரி சித்தரிக்கும் ஆபத்தும் இருப்பதாக கமிஷன் கூறுகிறது.

அவ்வாறு, தேர்தல் பதிவுகளை தவறாக யாரும் பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கத்துடன், சில மின்னணு ஆவணங்கள், பொதுமக்கள் கைகளுக்கு கிடைப்பது மட்டுமே, இந்த திருத்தத்தின் வாயிலாக, கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்கிறது.

இந்த பின்னணியில் தான், மத்திய அரசு செய்துள்ள திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி, ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.

இது குறித்து காங்., பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தேர்தல் நடைமுறையின் நேர்மை வேகமாக சிதைந்து வருகிறது. அதை மீட்டெடுக்க உச்ச நீதிமன்றம் உதவும் என நம்புகிறோம்.

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்த வேண்டிய அரசியல்சாசன அமைப்பான தேர்தல் கமிஷன் ஒருதலைப்பட்சமாக, பொது ஆலோசனையின்றி இதுபோன்ற முக்கிய சட்டத்தை திருத்துவது வெட்கக்கேடானது. இதை அனுமதிக்க முடியாது' எனக் குறிப்பிட்டுள்ளார்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்