Paristamil Navigation Paristamil advert login

திராவிட கட்சிகளுடன் முரண்பாடு, மாறுபட்ட கருத்து உள்ளது: திருமாவளவன்

திராவிட கட்சிகளுடன் முரண்பாடு, மாறுபட்ட கருத்து உள்ளது: திருமாவளவன்

26 மார்கழி 2024 வியாழன் 02:40 | பார்வைகள் : 281


தி.மு.க., அரசியல் கட்சியை விமர்சிப்பது என்பது வேறு. அது ஒரு தேர்தல் கட்சி. ஆண்ட கட்சி. ஆண்டு கொண்டு இருக்கிற கட்சி. விமர்சிப்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன . விமர்சிக்கலாம். திராவிட கட்சிகளுடன் முரண்பாடு, மாறுபட்ட கருத்து உள்ளது ,'' என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திருமாவளவன் பேசியதாவது: தேர்தல் களத்தில் வேறு வாய்ப்புகள் இருக்கும் சூழலில் அந்த வாய்ப்புகள் தேவையில்லை என முடிவெடுக்கப்பட்டது என்றால் அந்த முடிவு எத்தகைய துணிச்சல் வாய்ந்த கொள்கை சார்ந்த முடிவு என்பதை சொல்ல பலர் தயாராக இல்லை. இதை சொல்லாமல் தி.மு.க., அழுத்தம் கொடுக்கிறது. அதற்கு திருமாவளவன் பணிந்துவிட்டார் என சொல்கிறார்கள்.

கடந்த சட்டசபை லோக்சபா தேர்தலின்போது எண்ணிக்கை முக்கியமானது அல்ல. நாட்டு நலன் முதன்மையானது. சனாதன கட்சிகள் இந்த மண்ணில், வலுப்பெற்று விடக்கூடாது என்பதற்காக இக்கூட்டணியி்ல் நீடிக்க விரும்புகிறோம் என்று சொன்னேன். இந்த முடிவு எத்தகைய முடிவு என்ற கோணத்தை யாரும் பெரிதாக விவாதிக்கவில்லை. தமிழகத்தில் எப்படியாவது காலூன்றி விட வேண்டும். வேரூன்றி விட வேண்டும் என்ற பகீரத முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வலுப்பெற விடாமல் தடுப்பதற்காக தான் விடுதலை சிறுத்தைகள் பெரு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

மற்ற எதிர்ப்புகளை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. எத்தனை இடங்கள், அதிகாரப்பகிர்வு என்ன பதவி, கொள்கையில் ஆதாயம் என்ன என்ற கோணத்தில் நாங்கள அரசியலை அணுகவில்லை. திராவிட இயக்கங்களை பலவீனப்படுத்திவிட்டு சனாதன சக்திகள் இங்கு வேரூன்றினால், எதிர்காலம் எப்படி இருக்கும். இதைத்தான் தொலைநோக்கு பார்வையுடன் மதிப்பீடு செய்கிறோம்.

திராவிட கட்சிகளோடு முரண்பாடு உண்டு. மாறுபட்ட கருத்துக்கள் இருக்கிறது. விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனாலும் திராவிட இயக்கங்கள் பலவீனப்பட்டு விடக்கூடாது ஏன் என நினைக்கிறோம். பா.ஜ., கூட்டணியில் இருந்து அ.தி.மு.க., வெளியே வந்தால் தான் தன்னை தற்காத்துக்கொள்ள முடியும் என எதற்காக சொல்கிறோம். உடனடியாக அ.தி.மு.க., பக்கம் துண்டு போட்டு வைக்கிறார் என அவதூறு பரப்புகிறார்கள். அதுதான் அவர்களின் பார்வை. அ.தி.மு.க., பலவீனப்பட்டால், பா.ஜ.,அந்த இடத்தில் அமர்ந்துவிடும் என்ற கவலை அதுதான் விடுதலை சிறுத்தைகளின் பார்வை. திருமாவளவனின் பார்வை.தி.மு.க.,வை விமர்சிக்கின்றோம் என்ற பெயரில் ஒட்டுமொத்த திராவிட அரசியலை விமர்சிப்பது என்பது எவ்வளவு ஆபத்தானது.

திராவிட அரசியலையே வீழ்த்துவது யாருடைய நோக்கம் வீழ்த்த வேண்டும் என்பது யாருடைய நோக்கம். தி.மு.க., அரசியல் கட்சியை விமர்சிப்பது என்பது வேறு. அது ஒரு தேர்தல் கட்சி. ஆண்ட கட்சி. ஆண்டு கொண்டு இருக்கிற கட்சி. விமர்சிப்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன . விமர்சிக்கலாம். ஒட்டுமொத்தமாக திராவிட அரசியலையே பிழை என்று சொல்வது சனாதனத்திற்கு துணைபோகின்ற அணுகுமுறை என்பது சுட்டிக்கட்டாமல் இருக்க முடியாது. கண்டிக்காமல், அம்பலப்படுத்தாமல் இருக்க முடியாது.

தி.மு.க.,வுக்கு முட்டுக் கொடுக்கிறீர்களா என்று கேட்கிறீர்கள்.தி.மு.க., திராவிட அரசியலை பேசுகின்ற ஒரு அரசியல் கட்சி. திராவிட அரசியல் என்பது தி.மு.க., அரசியலோடு சுருங்கிவிடக்கூடியது அல்ல.என்ன பாதிப்புகள், இழப்புகள் நேர்ந்தாலும்,விமர்சனங்கள் நேர்ந்தாலும் திமுக கூட்டணியில் மதச்சார்பற்ற கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் உருவாக்கிய கூட்டணியில் நீடிக்கிறோம் என்றால், அந்த துணிச்சலை பாராட்டாமல், தி.மு.க.,வுக்கு முட்டுக் கொடுக்கிறார்கள் தி.மு.க., அழுத்தத்தற்கு பணிகிறார்கள் என்று விமர்சிக்கிறார்கள். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்