ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக அரசு துறைகள் நெத்தியடி!
26 மார்கழி 2024 வியாழன் 02:47 | பார்வைகள் : 261
பெண்களுக்கு உதவித்தொகை, 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச சிகிச்சை போன்ற செயல்படுத்தாத திட்டங்களுக்காக விண்ணப்பங்கள் கேட்கப்படுகின்றன. மோசடி நடக்கலாம் என்பதால் தகவல்களை மக்கள் கொடுக்க வேண்டாம்' என, டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக, அதே அரசின் இரண்டு துறைகள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையில் ஆம் ஆத்மி அரசு அமைந்துள்ளது. சட்டசபைக்கு வரும் பிப்ரவரியில் தேர்தல் நடக்க உள்ளது. பல்வேறு மாநிலங்களில், பெண்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தை டில்லியிலும் செயல்படுத்த ஆம் ஆத்மி அரசு முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும், சமீபத்தில் தான், மாதம், 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஆனால், இன்னும் செயல்படுத்தப்படவில்லை.
விளம்பரம்
இதற்கிடையே, மீண்டும் ஆட்சி அமைத்தால், இந்தத் தொகையை 2,100 ரூபாயாக உயர்த்தி தருவோம் என, ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் அறிவித்தார். இதைத் தவிர, டில்லியில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்கும் சஞ்சீவினி என்ற திட்டத்தையும் அவர் அறிவித்தார்.
இந்த அறிவிப்புகளைத் தொடர்ந்து, இதற்கான பயனாளிகள் விண்ணப்பிப்பதற்கான முகாம்களை, கெஜ்ரிவால் மற்றும் ஆதிஷி சமீபத்தில் நடத்தினர். மிக பிரமாண்டமான முறையில் இதற்கான பிரசாரத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.
கெஜ்ரிவால் மற்றும் ஆதிஷி, சில இடங்களில் வீடு வீடாகச் சென்று விண்ணப்பங்களை கொடுத்தனர். விண்ணப்பங்களை வழங்கும் நடவடிக்கைகளில் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், டில்லி அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை, சுகாதாரத் துறை ஆகியவை பொதுமக்களை எச்சரித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இந்த அறிவிப்புகள், பத்திரிகைகளில் விளம்பரமாகவும் கொடுக்கப்பட்டுள்ளன.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பெண்களுக்கு மாதம், 2,100 ரூபாய் உதவித் தொகை, சஞ்சீவினி போன்றவை டில்லி அரசால் செயல்படுத்தப்படாத திட்டங்கள்.
இவை போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும்போது, அவை குறித்து உரிய முறையில் அறிவிக்கப்படும். விண்ணப்பங்களும் அரசின் இணையதளத்தில் வெளியிடப்படும்.
ஏமாற வேண்டாம்
தற்போது இந்த செயல்படுத்தப்படாத திட்டங்களுக்கு, சில தனிநபர்கள் மற்றும் சில அரசியல் கட்சிகள் விண்ணப்பங்களை பெறுகின்றன. மேலும், பயனாளிகளின் தகவல்களை சேகரித்து வருகின்றனர் என்ற தகவல் ஊடகங்கள் வாயிலாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த திட்டங்களே நடைமுறையில் இல்லாத நிலையில், அதற்கான விண்ணப்பம் பெறுவது என்ற கேள்வியே எழவில்லை. எந்த ஒப்புதலும் இல்லாமல், மோசடியாக இவ்வாறு தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.
பான் கார்டு எண், மொபைல் போன் எண், வாக்காளர் அடையாள அட்டை போன்ற முக்கியமான ஆவணங்களை பொதுமக்கள் அளிக்க வேண்டாம். சைபர் குற்றம் அல்லது வங்கி மோசடி போன்றவை இதனால் நடக்கும் அபாயம் உள்ளது.
அதனால், இல்லாத ஒரு திட்டத்துக்கு தகவல் கொடுத்து ஏமாற வேண்டாம். மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
டில்லி முதல்வர் மற்றும் ஆளுங்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர், விண்ணப்பங்களை பெறும் முகாம்களை நடத்தி வரும் நிலையில், அரசுக்கு எதிராக, அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசுத் துறைகளே இவ்வாறு அறிவிப்புகள் வெளியிட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.விரைவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், இது ஆம் ஆத்மிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
மோசடி அறிவிப்பு!
டிஜிட்டல் மோசடிகாரர்கள் செய்வதை, டில்லி அரசும் செய்கிறது. மக்களின் தனிப்பட்ட தகவல்களை தனிநபர்கள் சேகரிப்பது, தவறாக பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளது. வெறும் அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டுவிட்டு, திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக கூறி, ஆம் ஆத்மி மக்களை ஏமாற்றியுள்ளது.- வீரேந்திர சச்தேவா டில்லி தலைவர், பா.ஜ.,
நடவடிக்கை எடுக்கப்படும்!
டில்லி அரசு துறைகள், பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்துள்ளது தவறான நடவடிக்கை. நெருக்கடி கொடுத்து, இந்த விளம்பரத்தை பா.ஜ., வெளியிட வைத்துள்ளது. இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது துறை ரீதியாகவும், போலீஸ் வாயிலாகவும் நடவடிக்கை எடுக்கப்படும். என்னை கைது செய்தாலும், சட்ட ரீதியில் அதை சந்திப்போம்.
-ஆதிஷி, டில்லி முதல்வர், ஆம் ஆத்மி
பயந்துவிட்டனர்!
நாங்கள் இந்த திட்டங்களை அறிவித்ததை அடுத்து, தேர்தலில் தங்களுக்கு தோல்வி ஏற்படும் என்பது பா.ஜ.,வுக்கு உறுதியாக தெரிந்து விட்டது. அதையடுத்து, இதுபோன்ற மோசடியில் பா.ஜ., ஈடுபட்டுள்ளது. அடுத்ததாக, முதல்வர் ஆதிஷி மீது பொய் வழக்கு தொடர்ந்து, அவருடைய வீட்டில் சோதனை செய்வர். அவரை கைது செய்வர். ஆம் ஆத்மியின் பல தலைவர்கள் வீடுகளிலும் சோதனைகள் நடக்கும்.- அரவிந்த் கெஜ்ரிவால் தேசிய ஒருங்கிணைப்பாளர், ஆம் ஆத்மி