காற்றழுத்தம் வலுவிழப்பில் தாமதம்; 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
26 மார்கழி 2024 வியாழன் 02:49 | பார்வைகள் : 258
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில், காலை 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு வங்கக்கடலில் அந்தமான் கடல் பகுதியில் டிச., 17 ல் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது படிப்படியாக மேற்கு, வட மேற்கில் தமிழகம் நோக்கி நகர்ந்தது. தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் கனமழை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த அமைப்பு ஆந்திரா நோக்கி நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.
கடலில் காணப்படும் வெப்பநிலை மாறுபாடு, காற்று குவிதல் மாற்றம் காரணமாக, இந்த அமைப்பு 'யு டர்ன்' அடித்து மத்திய வங்கக்கடல் பகுதிக்கு சென்றது. அங்கிருந்து மீண்டும் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களை நோக்கி வந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி, இந்த அமைப்பு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வட கடலோர மாவட்டங்களை ஒட்டிய வங்கக்கடலில் நிலவுகிறது. இது வலுவிழந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காற்றின் போக்கு காரணமாக வலுவிழப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை:
தமிழகம், ஆந்திராவை ஒட்டி தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது அடுத்த, 24 மணி நேரத்தில், காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்க கூடும். இதனால், தமிழகத்தில் ஒருசில பகுதிகள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. புத்தாண்டுக்கு முந்தைய நாளான டிச., 31 வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.
திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 10 மாவட்டங்களில் காலை 10:00 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த, இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும்; ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.