இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதே முதன்மையான பணி; பிரதமர் மோடி
27 மார்கழி 2024 வெள்ளி 03:07 | பார்வைகள் : 249
இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதே அரசின் முதன்மையான பணி' என டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.
டில்லியில் 2024ம் ஆண்டுக்கான, ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது பெற்றவர்களை பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: வீரம், புதுமை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இந்தியாவில் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் திறமையானவர்களாக திகழ்கின்றனர். நமது இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதே அரசின் முதன்மையான பணி. ஒவ்வொரு துறையிலும் புதிய மாற்றங்களை காணலாம். இதனால், நமது இளைஞர்களை எதிர்காலத்திற்கு தயாராக்க வேண்டும்.
நமது இளைஞர்கள் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட உழைக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, எனது அரசு சீக்கிய குரு கோவிந்த் சிங்கின் மகன்களின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் 'வீர் பால் திவாஸ்' கொண்டாட முடிவு செய்தது. இப்போது, இந்த நாள் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு தேசிய உத்வேகத்தின் திருவிழாவாக மாறியுள்ளது. எவ்வளவு கடினமான சூழ்நிலைகள் இருந்தாலும் நாடு மற்றும் தேச நலனை விட பெரியது ஏதுமில்லை. நாட்டுக்காக ஒவ்வொரு பணியையும் சிறப்பாக செய்ய வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.