ஈரோடு தொகுதியை விட்டு கொடுத்தால் ராஜ்யசபா சீட் !
28 மார்கழி 2024 சனி 03:37 | பார்வைகள் : 320
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் தி.மு.க., அத்தொகுதியை விட்டுக் கொடுக்கும்படி காங்கிரசிடம் கேட்க உள்ளது. அதற்கு பதிலாக, அக்கட்சிக்கு ஒரு ராஜ்யசபா எம்.பி., 'சீட்' தருவதற்கு தி.மு.க., தயாராக இருப்பதாக தெரிகிறது. இந்த 'டீல்' பற்றி, காங்கிரஸ் எம்.பி., ராகுலுடன் பேசவும் திட்டமிட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த இளங்கோவன் மறைவு காரணமாக, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அங்கு இடைத்தேர்தல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, டில்லி சட்டசபை தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தலும் நடக்க வாய்ப்பு உள்ளது.
விருப்பம்
இடைத்தேர்தலில் போட்டியிட, இளங்கோவனின் இரண்டாவது மகன் சஞ்சய் சம்பத், ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., பழனிசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் ரவி ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் காய் நகர்த்தி வருகின்றனர்.
இதற்கிடையில், ஈரோடு மாவட்டத்தில் நடந்த தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய பலரும், இடைத்தேர்தலில் தி.மு.க., போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தை வலியுறுத்தினர்.
முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரகுமார், மாவட்ட துணை செயலர் செந்தில்குமார் ஆகிய இருவரும், ஆளுங்கட்சியில் சீட் பெற முயற்சி மேற்கொண்டுஉள்ளனர்.
தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், பண மழை பெய்யும் என்பதாலும், களமிறங்க காத்திருக்கின்றனர்.
முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரகுமார் மகனின் திருமணம் சமீபத்தில் ஈரோடில் நடந்தது. அதில், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி பங்கேற்றதால், அவருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக மாவட்ட தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இதற்கிடையில், காங்கிரசில் போட்டியிட பலரும் ஆர்வம் காட்டினாலும், 'இடைத்தேர்தல் பார்முலா'வை செயல்படுத்தும் அளவுக்கு பணம் படைத்தவர்கள் இல்லை; காங்கிரசுக்கு செலவு செய்ய, அமைச்சர்களுக்கும் விருப்பம் இல்லை.
அதனால், தொகுதியை விட்டுக் கொடுக்கும்படி ராகுலிடம் பேச, தி.மு.க., தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
ஒருவேளை காங்கிரஸ் மேலிடம் தயங்கினால், அக்கட்சிக்கு ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட் தருவதாக சொல்லி, வழிக்கு கொண்டு வரும் திட்டமும் தி.மு.க.,விடம் இருப்பதாக தெரிகிறது.
இது குறித்து, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது:
வரும் 2025 ஜூலை மாதத்தில், தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.,க்கள் வில்சன், சண்முகம், அப்துல்லா, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, அ.தி.மு.க., - எம்.பி., சந்திரசேகரன், பா.ம.க., தலைவர் அன்புமணி ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைகிறது.
கமலுக்கு வாய்ப்பு
இந்த ஆறு இடங்களுக்கும், அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் ராஜ்யசபா தேர்தல் நடக்கும். தி.மு.க., சார்பில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. மீதமுள்ள இடங்களில் மூன்று தி.மு.க.,வுக்கு கிடைக்கும்.
கடந்த முறை முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு, ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கப்பட்டது. அவரது பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளன.
எனவே, ஈரோடு கிழக்கை விட்டுக் கொடுக்கும் பட்சத்தில், காங்கிரசுக்கு ராஜ்யசபா சீட் கிடைக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
பா.ஜ., போட்டி?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதா அல்லது புறக்கணிப்பதா என்பது குறித்து, அ.தி.மு.க., விரைவில் ஆலோசித்து முடிவெடுக்க உள்ளது. அ.தி.மு.க., ஒதுங்கிக் கொண்டால், பா.ஜ., களமிறங்குவது நிச்சயம். அ.ம.மு.க., பன்னீர்செல்வம் அணி, த.மா.கா., புதிய தமிழகம், ஐ.ஜே.கே., புதிய நீதிக் கட்சி ஆகியவை பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிக்கும் வாய்ப்பு உள்ளது.