வாகன அனுமதிப்பத்திரத்தை பறிமுதல் செய்யும்படி இனி உறவினர்கள் புகாரளிக்கலாம்.
28 மார்கழி 2024 சனி 07:39 | பார்வைகள் : 3048
வாகனம் செலுத்த அனுமதிப்பத்திரம் மட்டும் இருந்தால் போதாது, ஓட்டுனர் தனது அனைத்து திறன்களையும் கொண்டிருக்க வேண்டும் என பிரான்ஸ் சட்டம் கூறுகிறது. எனவே வாகனம் செலுத்தும் திறனை இழந்த ஒருவரின் அனுமதிப்பத்திரத்தை பறிமுதல் செய்யுமாறு நகர சபையிடம் உறவினர்கள் புகார் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பார்வைக் குறைபாடுகள், நினைவுத்திறன் இழப்பு, அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடிய மோசமாகக் கட்டுப்படுத்தப்படும் நீரிழிவு நோய், மயக்க மருந்துகளை உட்கொள்வது, வலிப்பு, சமநிலை இழப்பு அல்லது தூக்கமின்மை போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் தாங்களாகவே வாகனங்களை செலுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வயதான காலத்தில் வாகனம் செலுத்துபவர்களால் அண்மைக்காலமாக பிரான்சில் மோசமான வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. அவை குறித்து விசாரணையில் பெரும்பாலும் மேல் குறிப்பிட்ட காரணங்களே இருந்து வருகிறது. எனவே வாகனம் செலுத்துபவர்கள் தாங்களாகவே இத்தகைய அறிகுறிகள் இருந்தால் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அப்படி இல்லையேல் உறவினர்கள் குறித்த நபர் பற்றி நகர சபைக்கு அறிவிப்பதன் மூலம் அவரை மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கி தொடர்ந்து அவர் வாகனம் செலுத்த தகுதியானவர் அல்லது அவரிடமிருந்து வாகன அனுமதி பத்திரத்தை பறிமுதல் செய்வதா என்னும் முடிவை எட்ட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு தண்டனை அல்ல தன்னையும் மற்ற வாகனம் செலுத்தவர்களையும் பொதுமக்களையும் வீதியில் நடப்பவரையும் பாதுகாப்பதற்கான ஒரு முன் ஏற்பாடு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது