இந்தியாவில் பணக்கார முதல்வர் ! ஆய்வறிக்கையில் தகவல்
31 மார்கழி 2024 செவ்வாய் 02:50 | பார்வைகள் : 398
இந்தியாவில் மிகவும் பணக்கார முதல்வராக ரூ. 931 கோடி சொத்து மதிப்புடன் ஆந்திராவின் தெலுங்கு சேதம் கட்சி முதல்வர் சந்திர பாபு நாயுடு முதலிடத்தில் உள்ளார். அதே நேரம் மிகவும் ஏழை முதல்வராக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி முதலிடத்தில் உள்ளதாக ஆய்வு அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ஏ.டி.ஆர்., (ADR ) எனப்படும் ஜனநாயக சீர்திருத்திற்கான அமைப்பு மற்றும் என்.இ.டபிள்யூ. (NEW) எனப்படும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் என்ற அமைப்பும் இணைந்து 30 மாநில முதல்வர்களின் தேர்தல் பிரமாண வாக்கு மூலத்தில் சமர்பித்துள்ள தகவல்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளது.
பணக்கார முதல்வர்கள்
இந்தியாவில் மிகவும் பணக்கார முதல்வராக ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சி முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ. 931 கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் அருணாச்சல் பிரதேச முதல்வர் பெமா காண்டு ரூ. 332 கோடி சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். கர்நாடகா காங்., முதல்வர் சித்தராமயைா ரூ. 202 கோடி சொத்து மதிப்புடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.
ஏழை முதல்வர்கள்
மேற்குவங்க ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி முதல்வர் மம்தா பானர்ஜி ரூ. 15 லட்சம் சொத்து மதிப்புடன் முதலிடத்திலும், ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா ரூ.55 லட்சம் சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்திலும், கேரள முதல்வர் பினராயி விஜயன் ரூ. 1 கோடி சொத்து மதிப்புடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
கிரிமினல் முதல்வர்கள்
தெலுங்கானா காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிக கிரிமினல் வழக்குகளுடன் முதலிடத்தில் உள்ளார். இவர் மீது 89 கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதில் 72 -க்கும் மேற்பட்ட வழக்குகள் இந்திய தண்டனை சட்டத்தின் கீழான தண்டனைக்குரிய குற்ற வழக்குகள் ஆகும். ரேவந்த் ரெட்டிக்கு எதிராக இரண்டு குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவருக்கு அடுத்தபடியாக தமிழக முதல்வர் ஸ்டாலின் மீது 47 வழக்குகள் உள்ளன. இதில் 11 வழக்குகள் இந்திய தண்டனை சட்டத்தின் கீழான தண்டனைக்குரிய வழக்குகள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.