எம்.எஸ் தோனியின் 20 ஆண்டுகள்...!
1 தை 2025 புதன் 14:44 | பார்வைகள் : 168
2004 டிசம்பர் 23 அன்று, ராஞ்சியைச் சேர்ந்த நீண்ட முடி கொண்ட இளம் கிரிக்கெட் வீரர் சட்டோகிராமில் பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சர்வதேச அளவில் அறிமுகமானார்.
அந்த ஆட்டத்தில் ஒரு பந்தினை மாத்திரம் எதிர்கொண்ட அவர் எதுவித ஓட்டமுமின்றி ரன் அவுட் ஆனதால் அவரது தொடக்க இன்னிங்ஸ் பூஜ்ஜியத்துடன் நிறைவுக்கு வந்தது.
இது கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற வாழ்க்கையில் ஒன்றாக மாறும் ஒரு தவறான தொடக்கமாகும்.
அந்த இளைஞன் வேறு யாருமல்ல மகேந்திர சிங் தோனி தான்.
அன்றைய தினத்திலிருந்து இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர், தோனி ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றில் தலை சிறந்த தலைவர்களில் ஒருவராகவும், விக்கெட் காப்பாளர்களில் ஒருவராகவும் கொண்டாடப்படுகிறார்.
இது இந்திய மற்றும் உலகளாவிய கிரிக்கெட்டில் அழிக்க முடியாத முத்திரையை ஏற்படுத்துகிறது.
2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கிண்ணம், 2011 இல் ஒருநாள் உலகக் கிண்ணம், மற்றும் 2013 இல் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று ஐசிசி கிண்ணங்களையும் வென்ற ஒரே தலைவராக டோனி வரலாற்றில் இருக்கிறார்.
அது தவிர, ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவை உச்சத்துக்கு கொண்டு சென்றார் அவர்.
அத்துடன், நின்று விடாது கிரிக்கெட்டின் மீதான அவரது மோகம், ஐபிஎல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக்கிலும் கொடி கட்டிப் பறந்தது.
2008 முதல் 2023 ஆம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங் (CSK) அணியின் தலைவராக இருந்த தோனி 10 ஐபிஎல் இறுதிப் போட்டிகள் மற்றும் ஐந்து சாம்பியன்ஷிப்களுக்கு அணியை வழிநடத்தினார்.
இது ஐபிஎல் வரலாற்றில் ஒரு மைல்கல் சாதனையாகும்.
2020 ஆகஸ்ட் 15 அன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், தோனி ஐபிஎல்லில் தொடர்ந்து ஜொலித்ததுடன், சிஎஸ்கே ரசிகர்களால் “தல” என்று அன்பாக அழைக்கப்படும் ஒரு பிரியமான நபராக ஆனார்.
துடுப்பாட்டத்தில் 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 50.57 சராசரியுடன் 10 சதங்கள் மற்றும் 73 அரைசதங்களுடன் 10,773 ஓட்டங்களை குவித்துள்ளார்.
90 டெஸ்ட் போட்டிகளில் 38.09 சராசரியில் 6 சதங்கள் உட்பட 4,876 ஓட்டங்களை எடுத்தார்.
டி20 கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் 98 போட்டிகளில் 37.60 சராசரியில் 1,617 ஓட்டங்களை எடுத்தார்.
அதேநேரம் , ஒரு விக்கெட் காப்பாளராக தோனி, தனது மின்னல் வேக செயற்பாடுகளால் ஒருநாள் போட்டிகளில் 256 பிடியெடுப்புகள், 38 ஸ்டம்பிங்களும், டெஸ்டில் 444 ஆட்டமிழப்புகளையும் (321 பிடியெடுப்புகள், 123 ஸ்டம்பிங்கள்) மற்றும் டி20 கிரிக்கெட்டில் 91 ஆட்டமிழப்புகளையும் (57 பிடியெடுப்புகள் மற்றும் 34 ஸ்டம்பிங்ஸ்) அவர் மேற்கொண்டுள்ளார்.
தோனியின் சர்வதேச அறிமுகத்தின் 20 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் ஒரு இதயப்பூர்வமான பதிவினை இட்டு அவரை வாழ்த்தியுள்ளது.
அவரது அறிமுகத்திலிருந்து இரண்டு தசாப்தங்களை கிரிக்கெட் உலகம் மதிக்கும் நிலையில், “கேப்டன் கூலின்” பயணம் விடாமுயற்சி, தலைமைத்துவம் மற்றும் இணையற்ற திறமை என்பன மில்லியன் கணக்கானவர்களை ஊக்குவிக்கிறது.
நன்றி ஆதவன் செய்தி