கடைசி பந்தில் இலங்கை அணி வெற்றி! மாயாஜாலம் காட்டிய அசலங்கா, ஹசரங்கா
2 தை 2025 வியாழன் 11:52 | பார்வைகள் : 163
இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து வென்றது.
நெல்சனின் Saxton Oval மைதானத்தில் நடந்த கடைசி டி20 போட்டியில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.
முதலில் ஆடிய இலங்கை அணி 5 விக்கெட்டுக்கு 218 ஓட்டங்கள் குவித்தது. அதிரடியில் மிரட்டிய குசால் பெரேரா (Kusal Perera) 46 பந்தில் 101 ஓட்டங்கள் விளாசினார்.
அதன் பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டிம் ராபின்சன், ரச்சின் ரவீந்திரா அதிரடி தொடக்கம் தந்தனர்.
ராபின்சன் 21 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 37 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மார்க் சாப்மேன் (9), க்ளென் பிலிப்ஸ் (6) இருவரும் அசலங்கா ஓவரில் ஆட்டமிழந்தனர்.
எனினும் ரச்சின் ரவீந்திரா ருத்ர தாண்டவம் ஆடினார். 39 பந்துகளை எதிர்கொண்ட அவர், 4 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 69 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மிட்சேல் பே (8), பிரேஸ்வெல் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுக்க, டேர்ல் மிட்செல் வெற்றிக்காக போராடினார்.
ஆனால், துஷாரா ஓவரில் 35 (17) ஓட்டங்கள் எடுத்த நிலையில் டேர்ல் மிட்செல் (Daryl Mitchell) அவுட் ஆனார்.
அணித்தலைவர் மிட்செல் சான்ட்னர் (14), ஸகாரி போக்ஸ் (21) கூட்டணி வெற்றிக்காக போராடினர். கடைசி பந்தில் 9 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், நியூசிலாந்து அணி 1 ரன் மட்டுமே எடுக்க இலங்கை அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
எனினும், நியூசிலாந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. குசால் பெரேரா ஆட்டநாயகன் விருதையும், ஜேக்கப் டுஃப்பி தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.