ஷங்கர் இயக்கும் அடுத்த திரைப்படம்…
5 தை 2025 ஞாயிறு 10:41 | பார்வைகள் : 629
ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் ராம்சரண் நடிப்பில் 'கேம் சேஞ்சர்' என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து ஷங்கர் இயக்க உள்ள அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.
'இந்தியன் 2' திரைப்படம் ஷங்கருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இதனால் சற்று பின்னடைவை சந்தித்துள்ள அவர் 'கேம் சேஞ்சர்' படத்தின் மூலம் அதிரடியாக கம்பேக் கொடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் உள்ளார். தற்போது வெளியிடப்பட்டுள்ள 'கேம் சேஞ்சர்' படத்துடைய ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் இந்த திரைப்படம் டப்பிங் செய்யப்பட்டாலும் அனைத்து மொழிகளிலும் இந்த படத்துடைய டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த படத்தில் ஐஏஎஸ் அதிகாரி கேரக்டரில் ராம்சரண் நடித்துள்ளார். வில்லனாக எஸ். ஜே. சூர்யா அரசியல்வாதி கேரக்டரில் இடம் பெற்றுள்ளார்.
பாடல் காட்சிகள் மிக பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் 'கேம் சேஞ்சர்' படத்தை முடித்துக் கொண்டு ஷங்கர் அடுத்ததாக 'வேள்பாரி' நாவலை படமாக இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான திரை கதையை கொரோனா காலத்தில் ஷங்கர் எழுதி முடித்துள்ளார்.
இந்த படத்தில் ஹீரோ கேரக்டருக்கு யார் பொருத்தமானவராக இருப்பார்? என்ற கேள்வி சினிமா ரசிகர்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. ஷங்கர் தனது 'வேள்பாரி' ஹீரோவை இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் அந்த நாவலை படித்தவர்கள் விக்ரம், சூர்யா இவர்களில் ஒருவர் அந்த கேரக்டருக்கு பொருத்தமானவராக இருப்பார்கள் என்று கூறியுள்ளனர்.
இன்னும் சிலர் சிவகார்த்திகேயன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்கள். இன்னும் சிலர் கார்த்தியையும் குறிப்பிட்டுள்ளார்கள். 'இந்தியன் 2' படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காததால் 'இந்தியன் 3' திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகும் என தகவல்கள் பரவின. இதனை ஷங்கர் மறுத்திருக்கிறார். இன்னும் ஒரு சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட உள்ளதாகவும் அது முடிக்கப்பட்டால் 'இந்தியன் 3' திரைப்படம் ரெடியாகிவிடும் என சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.