ரூ.8,947 கோடி உள்கட்டமைப்பு திட்டம்; பணி தாமதத்தால் அவகாசம் நீட்டிப்பு?

11 மாசி 2025 செவ்வாய் 02:10 | பார்வைகள் : 3546
நகர்ப்புற உள்ளாட்சிகளில் கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக்காக, ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன், 8,947 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவக்கப்பட்ட திட்டத்தில், முடிக்கப்படாத பணிகள் குறித்த விபரங்கள் திரட்டப்படுவதாக, நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நகராட்சிகள், மாநகராட்சிகளில் பாதாள சாக்கடை, குடிநீர் வழங்கல், திடக்கழிவு மேலாண்மை போன்றவற்றுக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய தேவை எழுந்தது. இதற்கு மத்திய, மாநில அரசுகளின் நிதி போதுமானதாக இல்லை.
இதனால், சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து நிதி பெற, தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக, தமிழக நகர்ப்புற உள்கட்டமைப்பு முதலீட்டு திட்டம் உருவாக்கப்பட்டது.
ஆசிய வளர்ச்சி வங்கியுடன் இணைந்து, தமிழக நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனமான, 'டுபிசெல்' இதை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சிகளில் பாதாள சாக்கடை, குடிநீர் வசதிக்கான கட்டமைப்புகளை மேம்படுத்த, 8,947 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2018ல் இத்திட்டம் உருவாக்கப்பட்டது.
இதற்கு மூன்று தவணைகளாக, 3,496 கோடி ரூபாய் வழங்க, ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்தது.
இதில், உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் பங்காக, 1,137 கோடி ரூபாயை கடன்கள் வாயிலாக திரட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்காக, மாநகராட்சிகள், நகராட்சிகள், குடிநீர் வடிகால் வாரியம் ஆகியவை தனித்தனி திட்டங்களை உருவாக்கின. எட்டு ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, வரும் டிசம்பர் இறுதியில் முடிக்கப்பட உள்ளது.
ஆனால், பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில், பணிகள் இன்னும் முடியவில்லை. இதனால், இத்திட்டத்திற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது என்றும், முடிக்கப்படாத பணிகள் பற்றிய விபரங்கள் திரட்டப்படுவதாகவும் நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.