திருப்பதியில் மும்தாஜ் சொகுசு ஹோட்டல்; அர்ச்சகர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்
![திருப்பதியில் மும்தாஜ் சொகுசு ஹோட்டல்; அர்ச்சகர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்](ptmin/uploads/news/India_rathna_thirupathi.jpg)
13 மாசி 2025 வியாழன் 03:22 | பார்வைகள் : 446
திருப்பதி திருமலையில் மும்தாஜ் சொகுசு ஹோட்டல் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை கோவில் அர்ச்சகர்கள் நேற்று துவங்கினர்.
ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம், - பா.ஜ., - ஜனசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த 2014 - 2019 வரை சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது, தேவலோகம் என்ற திட்டத்துக்காக திருப்பதி திருமலையில் அலிபிரி அருகே 20 ஏக்கர் அரசு நிலம் சுற்றுலா துறைக்கு ஒதுக்கப்பட்டது.
அடுத்து வந்த ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சிக் காலத்தில் அந்த இடத்தில் மும்தாஜ் என்ற சொகுசு ஹோட்டல் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.
இந்த ஹோட்டல், ஐந்து நட்சத்திர வசதிகளுடன் உருவாக்க திட்டமிடப்பட்டது. கடந்த 2021 முதல் 94 ஆண்டுகளுக்கு இந்த நிலம் குத்தகையாக வழங்கப்பட்டது.
250 கோடி ரூபாய்
இதில், நான்கு ஆண்டுகள் கட்டுமானப் பணிக்காலம் போக, மீதி உள்ள 90 ஆண்டுகள் இந்த ஹோட்டலை மும்தாஜ் நிறுவனம் நடத்த முடிவு செய்யப்பட்டது. 20 ஏக்கர் நிலப்பரப்பில், 100 அறைகள் உடைய ஐந்து நட்சத்திர ஹோட்டலை 2026க்குள் கட்டி முடிக்கவும், 'டிரைடன்ட்' என்ற பெயரில் மேலும் 25 அறைகளை கட்டவும் திட்டமிடப்பட்டது.
மதுக்கூடம், ரெஸ்டாரன்ட், நீச்சல் குளம் உள்ளிட்ட பல சொகுசு வசதிகளுடன் இந்த ஹோட்டல் கட்டப்பட்டு வருகிறது. மொத்தமாக 250 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும் ஹோட்டலை, 2027ல் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.
புனித தலமாக போற்றப்படும் திருமலையில், ஐந்து நட்சத்திர ஹோட்டல் பயன்பாட்டுக்கு வந்தால், அசைவ உணவுகள் பரிமாறப்படும் என்பதால், இந்த திட்டத்துக்கு திருப்பதி திருமலை தேவஸ்தானம் எதிர்ப்பு தெரிவித்தது.
மும்தாஜ் ஹோட்டலுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து, நிலத்தை கோவில் நிர்வாகத்துக்கு வழங்க வேண்டும் என்றும், கடந்த ஆண்டு நவம்பரில் தேவஸ்தானம் தீர்மானம் நிறைவேற்றியது.
ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததை அடுத்து, திருப்பதி திருமலை கோவில் அர்ச்சகர்கள் நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கினர்.
ஏற்க மாட்டார்கள்
வாரிய அலுவலகத்தில் துவங்கப்பட்ட இந்த போராட்டத்தில், ஏராளமான அர்ச்சகர்கள் பங்கேற்றனர்.
இது குறித்து திருப்பதி திருமலை தேவசம் போர்டு தலைவர் பி.ஆர்.நாயுடு கூறுகையில், ''திருப்பதி பாலாஜி கோவிலுக்கு செல்லும் பாதையில் மும்தாஜ் என்ற பெயரில் ஹோட்டல் இருந்தால், ஹிந்துக்களின் உணர்வு புண்படும். கோவிலுக்கு அருகில் இந்த ஹோட்டல் அமைவதால் ஹிந்துக்கள் இதை ஏற்க மாட்டார்கள்,'' என்றார்.
![](/images/engadapodiyalxy.jpg)