பா.ஜ., ஆளாத மாநிலங்களை புறக்கணிக்கவில்லை: நிர்மலா

14 மாசி 2025 வெள்ளி 03:01 | பார்வைகள் : 683
பா.ஜ., ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரங்கள் கிடையாது; எந்த மாநிலத்தையும் மத்திய அரசு புறக்கணிக்கவில்லை,'' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஜ்யசபாவில் கூறினார்.
ராஜ்யசபாவில் நேற்று தி.மு.க., - எம்.பி.,க்கள், 'மத்திய பட்ஜெட்டில், பா.ஜ., ஆளாத மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன' என, குறிப்பிட்டனர். ''இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரம் இல்லாதது,'' என தமிழில் பதிலளித்த அமைச்சர் நிர்மலா கூறியதாவது:
மத்திய பட்ஜெட்டில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, பா.ஜ., ஆளாத மாநிலங்களை புறக்கணிக்கவில்லை.
புறக்கணித்ததாக கூறுவது அடிப்படை ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு. அவ்வாறு கூறப்படும் குற்றச்சாட்டை ஆதாரங்களுடன் மறுக்கிறேன். பட்ஜெட் தயாரிப்பின் போது, அனைத்து மாநிலங்களின் கருத்தும் கேட்டறியப்பட்டது.
இந்த பட்ஜெட், பீஹார் மாநிலத்திற்கு மட்டுமான பட்ஜெட் இல்லை; எல்லா மாநிலங்களுக்குமான பட்ஜெட். பஞ்சாப், தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களுக்கும் இந்த பட்ஜெட்டில் பல உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களை மத்திய அரசு வழங்கியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தான், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அனுமதியை வழங்கியது. ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான தடையை விலக்கியது, மத்திய அரசு தான்.
இவ்வாறு அவர் கூறினார்.