திருமண தேதியை அறிவித்த அமீர்-பாவனி ஜோடி..!

15 மாசி 2025 சனி 12:35 | பார்வைகள் : 921
பிக் பாஸ் போட்டியாளர்களான அமீர் மற்றும் பாவனி கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், தற்போது அவர்கள் திருமண தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்களாக இருந்த அமீர் மற்றும் பாவனி ரெட்டி, நிகழ்ச்சியின் போது காதலித்ததாக கூறப்பட்டது. நிகழ்ச்சி முடிந்த பிறகும், இருவரும் காதலை தொடர்ந்தனர். இதனால், அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இப்போது, அமீர் - பாவனி காதல் தொடங்கி மூன்று வருடங்கள் நிறைவடைந்த நிலையில், அவர்கள் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு, திருமண தேதியை அறிவித்துள்ளனர். அந்த வீடியோவில், தங்களது காதல் அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
"இந்த மூன்று வருடம் எப்படி போனது என்றே தெரியவில்லை. பிடித்தவர்களுடன் இருந்தால் மூன்று வருடம் கூட மூன்று நிமிடமாக தோன்றும்," என்று பாவனி கூற, அதற்குப் பதிலளித்த அமீர், "இந்த மூன்று வருடத்தில் பல மறக்க முடியாத நினைவுகள் உருவாகின. ஒரு பையனுக்கு மிகுந்த சந்தோஷம் தரும் விஷயம் என்னவென்றால், அவனுக்கு பிடித்த பெண் அவனுடைய காதலை ஏற்றுக்கொள்வதே. இது என் வாழ்க்கையின் மிக மகிழ்ச்சியான தருணம்," என்று தெரிவித்தார்.
அதன் பின்னர் பாவனி, "நீங்கள் என்னிடம் காதலை கூறிய போது, என் இதயத்துடிப்பு எவ்வளவு வேகமாக இருந்தது தெரியுமா? பயம் ஒரு பக்கம், சந்தோஷம் ஒரு பக்கம்! எங்கே மறுபடியும் தவறான முடிவு எடுத்து விடுவோமோ என்ற பயம். ஆனால், நீங்கள் எனக்கு அளித்த நம்பிக்கை எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது," என்று கூறினார்.
அடுத்து அமீர், "இனிமேல் வாழ்க்கை முழுவதும் இணைந்து வாழப் போகிறோம்," என்று உறுதியாக தெரிவித்தார்.
அமீர் - பாவனி திருமணம் ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.