அமெரிக்கா மீதான கோபத்தை வெளிப்படுத்தும் கனேடிய மக்கள்

15 மாசி 2025 சனி 14:30 | பார்வைகள் : 1198
கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 25 சதவிகித வரிகளும், கார்கள் மீது 100 சதவிகித வரிகளும் விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டிய விடயத்தை கனேடிய மக்கள் சீரியஸாக எடுத்துக்கொண்டுள்ளார்கள்.
கனேடிய அரசாங்கம் என்ன பதில் நடவடிக்கை எடுக்கப்போகிறதோ தெரியாது, கனேடிய மக்கள் அமெரிக்கா மீதான தங்கள் கோபத்தை வெளிப்படுத்தத் துவங்கிவிட்டார்கள்.
கனேடியர்கள் பலர் இனி அமெரிக்காவுக்குச் சுற்றுலா செல்வதில்லை என முடிவெடுத்துள்ளார்கள்.
மாணவர்களோ, கனடா பல்கலைகழகங்களிலேயே படிப்பது என முடிவெடுத்துள்ளார்கள்.
உள்ளூர் பொருட்களை வாங்குதல், உள்ளூர் மக்களுக்கே விற்பனை என கனேடியர்கள் பலர் தங்கள் நடவடிக்கைகளைத் துவங்கிவிட்டார்கள்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதியின் நண்பரும், கோடீஸ்வரருமான எலான் மஸ்குக்கு ஆதரவை விலக்கிக்கொள்ள முடிவு செய்துள்ளார் கியூபெக்கில் வாழும் கனேடியர் ஒருவர்.
அவரது பெயர் ஆலைன் ராய் (Alain Roy) அவர் ஒரு டெஸ்லா கார் வைத்துள்ளார், அவரது மனைவி ஒரு டெஸ்லா கார் வைத்துள்ளார்.
அத்துடன், ஒரு சைபர் ட்ரக்கும் ஆர்டர் செய்திருந்தார் ராய்.
ஆனால், தற்போது தனது இரண்டு டெஸ்லா கார்களையும் விற்க முடிவு செய்துள்ளதுடன், சைபர் ட்ரக் ஆர்டரையும் ரத்து செய்துவிட்டார் ராய்.
பல ஆண்டுகளாக எலான் மஸ்கின் ரசிகராக இருந்தவர் ராய். ஏற்கனவே வரிவிதிப்பு விடயத்தால் ஒரு கனேடியராக அமெரிக்கா மீது கோபத்திலிருக்கும் நிலையில், ட்ரம்ப் பதவியேற்பு விழாவின்போது எலான் மஸ்க் நாஸி சல்யூட் அடித்த விடயம் அவருக்குப் பிடிக்கவில்லை.
ஆக, இனி எலான் மஸ்குக்கு தனது ஆதரவு கிடையாது என்று கூறிவிட்டார் ராய்.