18 படிகளில் ஏறியதும் நேரடி ஐயப்ப தரிசனம்: மார்ச் 14 முதல் 6 நாட்கள் சோதனை முறையில் அமல்

19 மாசி 2025 புதன் 02:56 | பார்வைகள் : 4353
சபரிமலை சன்னிதானத்தில் 18 படிகளில் ஏறியதும் கொடி மரத்தின் இரு பக்கங்கள் வழியாகச் சென்று ஐயப்பசுவாமியை அதிக நேரம் தரிசிக்கும் புதிய திட்டம் மார்ச் 14- முதல் 6 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது.
18 படிகளில் ஏறிய பின் பக்தர்கள் சபரிமலை சன்னிதானத்தில் சுற்றியுள்ள மேம்பாலத்தில் ஏற்றப்பட்டு ஸ்ரீ கோயில் இடது பக்கம் கீழே இறங்கி மூன்று வரிசைகளில் நின்று தரிசனம் செய்கின்றனர். நீண்ட நேரம் காத்திருந்து வரும் பக்தர்களுக்கு சில வினாடிகள் மட்டுமே ஐயப்பசுவாமியை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இதை தவிர்க்க மாற்று வழியை திருவிதாங்கூர் தேவசம் போர்டு யோசனை செய்தது.
அதன்படி 18 படிகளில் ஏறியதும் கொடிமரம் மற்றும் பலிபீடத்தின் இரு பக்கங்கள் வழியாக பக்தர்களை பிரித்து வரிசையில் அனுப்பப்படுவர். அவர்கள் ஸ்ரீ கோயில் முன் செல்லும் வரை ஐயப்பன் விக்ரகத்தை தரிசித்தபடியே செல்ல முடியும். வரிசை ஒழுங்காக செல்வதற்காக நடுவில் நீள வாக்கில் உண்டியல் அமைக்கப்படுகிறது. இந்த புதிய திட்டம் மூலம் 15 மீட்டர் தூரம் வரை நடந்து சென்றபடி ஐயப்பசுவாமியை வணங்க முடியும். 30 வினாடிகள் வரை தரிசனத்திற்கான வாய்ப்பு உள்ளது.
இரு வரிசைகளில் இடது பக்கம் உள்ள வரிசை சற்று உயரமாகவும், வலது பக்கம் உள்ளது சற்று தாழ்வாகவும் இருக்கும். இரு வரிசையிலும் நிற்கும் பக்தர்கள் சேர்ந்து நெரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை. வடக்கு வாசல் வழியாக இருமுடி இல்லாமல் வரும் பக்தர்கள் ஏற்கனவே உள்ள முதல் வரிசையில் சென்று தரிசிக்க முடியும்.
இந்த புதிய திட்டத்திற்கு சபரிமலை தந்திரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். கோயிலின் தாந்த்ரீக விதிகளிலோ, கணக்குகளிலோ மாற்றமில்லாததால் இவர்கள் இதை வரவேற்றுள்ளனர். கேரள உயர்நீதிமன்றமும் இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை மார்ச் 14-ல் திறக்கப்படும் போது அன்று முதல் ஆறு நாட்கள் இந்த திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும். இருப்பினும் சபரிமலையில் தற்போது உள்ள மேம்பாலம் அப்படியே இருக்கும். சீசன் காலத்தில் பக்தர்களின் நீண்ட கியூ மர கூட்டத்தைக் கடக்கும் போதும், ஏதாவது அவசர காலகட்டங்களிலின் போதும் பக்தர்கள் இந்த மேம்பாலத்தில் ஏற்றி நிறுத்தப்படுவர். இந்த மேம்பாலம் 1989 -ல் கட்டப்பட்டது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1