Paristamil Navigation Paristamil advert login

சி.பி.எஸ்.இ., தரத்துக்கு தமிழக அரசு பள்ளிகள் மாறினால் தவறா?

சி.பி.எஸ்.இ., தரத்துக்கு தமிழக அரசு பள்ளிகள் மாறினால் தவறா?

19 மாசி 2025 புதன் 02:58 | பார்வைகள் : 1156


தேசிய கல்விக்கொள்கையை ஏற்பதன் வாயிலாக, ஏழை, எளிய மாணவ - மாணவியர் படிக்கும் அரசு பள்ளிகள், சி.பி.எஸ்.இ., தரத்திற்கு மாறும். தமிழக கல்வி முறையை தரம் வாய்ந்ததாக மாற்ற, தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது நல்லது' என, அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

அனைவருக்கும் கல்வியை தர வேண்டும் என்ற நோக்கில், நாட்டில் முதல் தேசிய கல்விக் கொள்கை, 1968, இரண்டாம் தேசிய கல்விக் கொள்கை, 1986ல் அமல்படுத்தப்பட்டது. 3வது தேசிய கல்விக் கொள்கை, 2020 ஜூலையில் அமல்படுத்தப்பட்டது.

மறுத்து வருகிறது


இது கல்வித்தரத்தை அடிப்படையாக வைத்து கட்டமைக்கப்பட்டதாக, மத்திய அரசு தெரிவித்தது. இதை, பெரும்பாலான மாநிலங்கள் அமல்படுத்திய நிலையில், ஹிந்தி திணிப்பு என, தமிழக அரசு மறுத்து வருகிறது. இதனால், மத்திய அரசு நிதி ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:

தேசிய கல்விக் கொள்கையை, பா.ஜ., ஆளும் மாநிலங்கள் மட்டுமின்றி, பிரதான எதிர்க்கட்சிகளான காங்., - கம்யூ., ஆளும் மாநிலங்கள் கூட அமல்படுத்தியுள்ளன. கர்நாடகா, கேரள அரசுகள் ஏற்ற நிலையில், தமிழக அரசு மட்டும் அரசியலாக்கி வருகிறது.

தற்போது, தமிழகத்தில் அனைத்து தனியார் பள்ளிகளிலும், 5ம் வகுப்பு வரை, 3வது மொழிப் பாடமாகவும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 8ம் வகுப்பு வரை கட்டாய பாடமாகவும் ஹிந்தி உள்ளது. அரசு பள்ளிகளில் மட்டும் தான் ஹிந்தி கற்க வாய்ப்பில்லை.

மூன்றாவது மொழிப்பாடம் எனும்போது, அதன் பாடச்சுமை மிகக் குறைவு. குறிப்பாக, மொழியில் உள்ள எழுத்துகளை அறிமுகம் செய்தல், வாசித்தல், எழுதுதல் உள்ளிட்டவை மட்டும் நோக்கம். இது குழந்தைகளுக்கு பாரமில்லை. அப்படி இருந்தால், தனியார் பள்ளிகளில் குழந்தைகள் சேராமல் இருக்க வேண்டும்.

தேசிய கல்விக் கொள்கையில், 5ம் வகுப்பு வரை தாய்மொழி கல்வியில் இருக்க வேண்டும் என, அறிவுறுத்தப்படுகிறது. அதாவது தமிழ் மட்டும் பயிற்றுமொழி. தாய்மொழியில் கற்பதால், குழந்தைகள் எளிதாக புரிந்து கொள்கின்றனர் என ஆய்வுகள் கூறினாலும், அரசு பள்ளிகளில் இருந்து தனித்துவமாக காட்டிக்கொள்ள, தனியார் பள்ளிகள் ஆங்கில வழி, ஹிந்தி மொழிப்பாடம், கே.ஜி., வகுப்புகள் உள்ளிட்டவற்றை கையில் எடுத்து, மாணவர்களை அதிகளவில் சேர்க்கின்றன.

அதனால் தான் அரசு பள்ளிகளில் ஹிந்தி கற்பிப்பதை, தனியார் பள்ளிகள் விரும்புவதில்லை. அவற்றுக்கு ஆதரவாகவே, அரசின் குரலும் நிலைப்பாடும் இருப்பதாக தெரிகிறது. தாய்மொழிக் கல்வியை தனியார், அரசு பள்ளிகளில் பேதமின்றி அமல்படுத்தினால், தனியார் பள்ளிகளுக்கு வரவேற்பு குறையும். அரசு பள்ளிகளில், கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி., ஆகிய வகுப்புகளையும் உருவாக்க வேண்டியிருக்கும். இதனால் அரசு - தனியார் பள்ளிகள் இடையே வித்தியாசம் இல்லாத நிலை உருவாகும்.

பின்தங்கி உள்ளது


அரசு பள்ளிகளில் இதற்கான கட்டமைப்பு, ஆசிரியர் பணியிடங்கள் உள்ளிட்டவற்றுக்கு, மத்திய அரசு திட்டத்தின் கீழ் நிதி கிடைக்கும். 8ம் வகுப்பில் இருந்து தொழிற்கல்வி கற்கும் வாய்ப்பு, மேல்நிலை வகுப்புகளில் விருப்ப பாடத்தை தேர்வு செய்து படிக்கும் வாய்ப்பு என, மாணவர்களின் திறன் வளர்ப்புக்கு, இத்திட்டத்தில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

தமிழக பள்ளிக்கல்வி தரத்தை பொறுத்தவரை, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்திய மற்ற மாநிலங்களைவிட பின்தங்கியே உள்ளது. நீட், ஜே.இ.இ., உள்ளிட்ட உயர் கல்வி நுழைவுத் தேர்வுகளை சந்திப்பதிலும், தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் திணறி வருகின்றனர்.

அதனால், இதை அரசியல் ஆக்காமல், ஏழை, எளிய மாணவ -- மாணவியர் படிக்கும் அரசு பள்ளிகளை தரம் வாய்ந்ததாக மாற்ற, தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது நல்லது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்