சூர்யா படத்தின் படப்பிடிப்பு திடீர் நிறுத்தமா?

20 மாசி 2025 வியாழன் 10:54 | பார்வைகள் : 737
சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'சூர்யா 45’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்த நிலையில், திடீரென தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் "சூர்யா 45" படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவையில் நடைபெற்ற நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
சென்னை வண்டலூர் அருகே உள்ள வெளிச்சம் என்ற கிராமத்தில் படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்தபோது, படப்பிடிப்பு காரணமாக பொதுமக்கள் இடையூறு ஏற்படுவதாக புகார் தெரிவித்தனர். இதனால், படக்குழுவினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, காவல்துறை தலையிட்டு இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இதன் காரணமாக "சூர்யா 45" படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.நீண்ட இடைவெளிக்குப் பிறகு, சூர்யாவுடன் த்ரிஷா இந்த படத்தில் ஜோடியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.-