மார்ச் 5ல் அனைத்து கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., பங்கேற்கும்: இ.பி.எஸ்., அறிவிப்பு

28 மாசி 2025 வெள்ளி 14:39 | பார்வைகள் : 154
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மார்ச் 5ம் தேதி நடக்க உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., பங்கேற்கும்' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.
சேலத்தில் நிருபர்கள் சந்திப்பில், இ.பி.எஸ்., கூறியதாவது: தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மார்ச் 5ம் தேதி நடக்க உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., கலந்து கொள்ளும். அ.தி.மு.க., சார்பில் இருவர் பங்கேற்று கருத்துக்களை அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவிப்போம். கூட்டத்தை அதற்கு தான் ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். அங்க தான் பேச முடியும்.
கூட்டத்தில் எங்களது நிலைப்பாடை தெளிவாக எடுத்துரைப்போம். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க.,தான். வேறு எந்த கட்சிக்கும் கிடையாது. மக்கள் கொடுத்த அங்கீகாரம் அ.தி.மு.க.,வுக்கு தான். பிரதான எதிர்க்கட்சி தான் மக்களின் பிரச்னையை எடுத்து சொல்லும். இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.
ஸ்டாலினின் மன்னராட்சி!
அவரது அறிக்கை: தி.மு.க., தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் மாவட்ட கலெக்டர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உட்பட ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகத்திற்கும் மிரட்டல் விடுத்ததாக செய்திகள் வருகின்றன. தர்மபுரியில் மட்டுமல்ல இதுபோன்ற மிரட்டல்கள் திமுகவினரால் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருவதன் எடுத்துக்காட்டு தான் இது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான மன்னராட்சியில் தி.மு.க., அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும் குறுநில மன்னர்கள் போல் செயல்படுவதும், அரசு அதிகாரிகளை மிரட்டி தங்கள் ஏவலுக்கு அடிபணிய வைப்பதும் கடும் கண்டனத்திற்குரியது. தி.மு.க.,வினரின் மிரட்டலால் அரசு அதிகாரிகள் மன அழுத்தத்தினாலும் வேதனையிலும் சோர்வுற்று இருப்பதை உணர முடிகிறது. மேலும் இந்த ஆட்சியில் அதிகாரிகள் அத்துமீறுவதும், போலீசார் ஏவல்துறையாக மாறியிருப்பதும் இத்தகைய அழுத்தத்தால் தானா என்ற கேள்விக்கு இதுவே பதிலாகவும் அமைந்துள்ளது.
கலெக்டரையே மிரட்டத் துணிந்தவர்கள், சாமானிய மக்களை எத்தகைய இன்னலுக்கு ஆளாக்குவார்கள் என்பதை நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. அரசு அதிகாரிகளையும், மக்களையும் வஞ்சிக்கும் இந்த காட்டாட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைப்பதே இதற்கு தீர்வாக அமையும். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.