ஜனாதிபதி ட்ரம்ப் ஜெலென்ஸ்கியுடன் வார்த்தை மோதல்...

2 பங்குனி 2025 ஞாயிறு 07:05 | பார்வைகள் : 474
ஜனாதிபதி ட்ரம்ப் ஜெலென்ஸ்கியுடன் வார்த்தை மோதலில் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க எரிபொருள் சப்ளையர் ஒருவர் அமெரிக்க இராணுவத்துடனான உறவுகளை துண்டித்துள்ள சம்பவம் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் நோர்வே நிறுவனமான Haltbakk Bunkers வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓவல் அலுவலகத்தில் நடந்த சம்பவமே காரணம் என்றும் கடுமையான வார்த்தைகளில் பதிவு செய்துள்ளது.
மேலும், தங்களுக்கு ஒரு தார்மீக பொறுப்பு இருப்பதால், இனிமேல் நோர்வேயில் உள்ள அமெரிக்க இராணுவக் கப்பல்களுக்கோ அல்லது நோர்வே துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல்களுக்கோ எரிபொருள் வழங்காது என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.
உலக நாடுகள் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக முடிவெடுக்க வேண்டும் என்றும் நோர்வே நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி வான்ஸ் ஆகியோர் கூட்டாக ஜெலென்ஸ்கியை சாடியதுடன், உக்ரைன் அமைதியை விரும்பவில்லை என்றும் கொந்தளித்தனர்.
உண்மையில் இது திட்டமிட்ட செயல் என்றே அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது. தற்போது ஜனாதிபதி ட்ரம்புக்கும் ஐரோப்பிய தலைவர்களுக்கும் இடையே உக்ரைன் தொடர்பில் ஒரு பாலமாக இருக்க பிரித்தானியாப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.
இதனிடையே ஜெலென்ஸ்கியை பாராட்டியுள்ள Haltbakk Bunkers, எரிபொருள் விநியோம் தொடர்பில் உடனடியாக முடிவெடுத்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கு இனி எரிபொருள் இல்லை என அறிக்கையில் குறிப்பிட்டுள்ள Haltbakk Bunkers, உக்ரைனுக்கு ஆதரவாக என்றும் பதிவு செய்துள்ளது.