டில்லி சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்று மாலை முடிகிறது: மோடி தீவிர ஓட்டு வேட்டை
3 மாசி 2025 திங்கள் 03:42 | பார்வைகள் : 444
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டில்லி சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. டில்லியில் பா.ஜ.,வை ஆட்சி கட்டிலில் அமர்த்தும் நோக்கில், பிரதமர் மோடி நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, நாளை மறுதினம் ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. மொத்தம் 70 தொகுதிகள் உள்ளன.
இந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மியும், காங்கிரசும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ., 68 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
@subtitle@ 699 வேட்பாளர்கள்
அதன் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக்தந்திரிக் ஜன சக்தி கட்சிகள் தலா ஒரு தொகுதியில் போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில், 96 பெண்கள் உட்பட 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஆம் ஆத்மி தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதற்காக, அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, ஆதிஷி ஆகியோர் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
பா.ஜ.,வை பொறுத்தவரையில் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் அக்கட்சியின் தேசிய தலைமை முதல், மாநில நிர்வாகிகள் வரை குறிக்கோளாக கொண்டு களமிறங்கியுள்ளனர்.
பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, கட்சியின் தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.
பா.ஜ., ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் யோகி ஆதித்யநாத், புஷ்கர் சிங் தாமி, தேவேந்திர பட்னவிஸ் உள்ளிட்டோரும் தேர்தல் பிரசாரம் செய்தனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ராகுல், பிரியங்கா, தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர், தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.
'மகளிருக்கு மாதம் 2,500 ரூபாய் உதவித் தொகை, மெட்ரோ ரயிலில் மாணவர்களுக்கு இலவசம்' என, பல்வேறு இலவச அறிவிப்புகளால் வாக்காளர்களை அனைத்து கட்சிகளுமே திக்குமுக்காடச் செய்துவிட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில், இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. இதை முன்னிட்டு, வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
மத்திய பட்ஜெட்டில், 12 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள கமிஷன்
இந்த அறிவிப்பு, நடுத்தர வருவாய் பிரிவினருக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதைத் தவிர பட்ஜெட்டில் உள்ள அறிவிப்புகள், நாடு முழுதும் உள்ள அனைத்து குடும்பங்களிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
அடுத்ததாக எட்டாவது சம்பளக் கமிஷன் வரப்போகிறது. ஓய்வூதிய முறைகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இவ்வாறு, அனைத்து மக்களின் நலனை மனதில் கொண்டே மத்திய பட்ஜெட் மற்றும் அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இந்த பட்ஜெட்டுடன் முந்தைய காங்கிரஸ் ஆட்சிகளை ஒப்பிட்டு பாருங்கள். இதுவே நேருவின் ஆட்சியாக இருந்தால், 12 லட்சம் ரூபாயில், 25 சதவீதம் வரியாக சென்றிருக்கும். இந்திரா ஆட்சியாக இருந்தால், 10 லட்சம் ரூபாய் வரியாக போயிருக்கும். அதுவே, 12 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியாக இருந்திருந்தால், 2.60 லட்சம் ரூபாய் வரியாக செலுத்த வேண்டியிருக்கும்.
தற்போது 12 லட்சம் ரூபாய் வரைக்கும், 1 ரூபாய் கூட வரி செலுத்த தேவையில்லை.
டில்லியில் உள்ள ஆம் ஆத்மியின் பேரழிவு ஆட்சியால் மக்கள் விரக்தியில் உள்ளனர். அந்தக் கட்சியில் இருந்து பலர் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். வசந்த பஞ்சமியை வரவேற்கும் வகையில், டில்லிக்கும் வசந்தம் வரப்போகிறது.
இந்த தேர்தலில், பா.ஜ.,வின் ஆட்சி அமைய உள்ளது தெளிவாகத் தெரிகிறது. மத்தியிலும், டில்லியிலும், பா.ஜ.,வின் இரட்டை இன்ஜின் ஆட்சி அமைவது உறுதி.
இவ்வாறு அவர் பேசினார்.
ஈரோட்டிலும் இன்று நிறைவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓயும் நிலையில், ஓட்டுச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளதை அதிகாரிகள் உறுதி செய்து வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலிலும், நாளை மறுதினம் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில், 46 வேட்பாளர்கள் போட்டியில் உள்ள நிலையில், இன்று மாலை 6:00 மணியுடன் பிரசாரம் நிறைவடைகிறது.
இன்று மதியம் 3:00 மணிக்கு மேல், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கிருஷ்ணா தியேட்டர் அருகே வாகன பிரசாரத்தில் பேசி, பிரசாரத்தை நிறைவு செய்ய உள்ளார். தி.மு.க.,வினர் பிரசார நிறைவு இடம் அறிவிக்கவில்லை. இருப்பினும், வழக்கமாக ஈரோடு பி.எஸ்.பார்க்கில் நிறைவு செய்வது வழக்கம். அவ்விடத்தில் அனுமதி கோரியதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதேநேரம், இத்தொகுதியில் வாக்காளர்களாக, பொதுமக்களாக உள்ளவர்கள் நீங்கலாக, பிற மாவட்டத்தினர் மாலை, 6:00 மணிக்குள் வெளியேற வேண்டும் என, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்பின், ஓட்டுப்பதிவு முடியும் வரை உள்ளூர் நிர்வாகிகள், தேர்தல் பணிகளை கவனிக்க உள்ளனர்.
ஏற்கனவே, பெரிய கட்சிகளுடன் போட்டி இல்லாததால், அமைதியாகவே காணப்பட்ட தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுவதால், போலீசாரும் நிம்மதி அடைகின்றனர். அத்துடன், ஓட்டுச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளதை அதிகாரிகள் உறுதி செய்து வருகின்றனர்.