துபாய் டி20யில் டேவிட் வார்னர் ருத்ர தாண்டவம்
3 மாசி 2025 திங்கள் 14:11 | பார்வைகள் : 383
சர்வதேச லீக் டி20 போட்டியில் துபாய் கேபிட்டல்ஸ் அணி 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.
துபாய் மைதானத்தில் நடந்த போட்டியில் துபாய் கேபிட்டல்ஸ் (Dubai Capitals) அணி முதலில் துடுப்பாடியது.
ஷாய் ஹோப் 24 பந்துகளில் 36 ஓட்டங்கள் விளாசி வெளியேற, குல்பதின் நைப் சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
அவர் 47 (25) ஓட்டங்கள் விளாசிய நிலையில் நரைன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடங்கும்.
மறுமுனையில் பவுண்டரிகளை விரட்டிய டேவிட் வார்னர் அதிவேக அரைசதம் அடித்தார். 57 பந்துகளை எதிர்கொண்ட டேவிட் வார்னர் (David Warner), ஆட்டமிழக்காமல் 1 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 93 ஓட்டங்கள் குவித்தார்.
தசுன் ஷானகா 12 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 34 ஓட்டங்கள் விளாச, துபாய் கேபிட்டல்ஸ் அணி 217 ஓட்டங்கள் குவித்தது.
அடுத்து களமிறங்கிய அபுதாபி அணி முதல் விக்கெட்டுக்கு 63 பந்துகளில் 96 ஓட்டங்கள் குவித்தது. கைல் மேயர்ஸ் (Kyle Mayers) 42 (29) ஓட்டங்கள் ஆட்டமிழக்க, 29 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஜோ கிளார்க் ரிட்டையர் ஹர்ட் முறையில் வெளியேறினார்.
எனினும் ஆன்ரியஸ் கோஸ் சரமாரியாக ரன் வேட்டை நடத்த அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. ஆனால் துஷ்மந்தா சமீராவின் (Dushmantha Chameera) துல்லியமான பந்துவீச்சில் கோஸ் 78 (47) ஓட்டங்களிலும், ஆந்த்ரே ரஸல் முதல் பந்திலும் அவுட் ஆக அபுதாபி நைட்ஸ் தடுமாறியது.
கடைசி ஓவரை குல்பதின் நைப் வீச, ஹோல்டர் இரண்டு சிக்ஸர்களை விளாசினார். ஆனால் அந்த அணி 191 ஓட்டங்களே எடுத்ததால், துபாய் கேபிட்டல்ஸ் 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சுனில் நரைன் 8 பந்தில் 22 ஓட்டங்களும், ஜேசன் ஹோல்டர் 9 பந்தில் 16 ஓட்டங்களும் ஆட்டமிழக்காமல் எடுத்தனர். 93 ஓட்டங்கள் விளாசிய வார்னர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.