பரிஸ் : காவல்துறையினர் மீது தாக்குதல் - மூவர் காயம்!

4 மாசி 2025 செவ்வாய் 17:11 | பார்வைகள் : 1534
பரிசில் உள்ள காவல்துறையினரின் தலைமைச் செயலகத்துக்கு முன்பாக காவல்துறையினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மூன்று காவல்துறையினர் காயமடைந்துள்ளனர்.
பெப்ரவரி 4, இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பரிஸ் 4 ஆம் வட்டாரத்தின் rue de la Cité வீதியில் உள்ள காவல்துறையினரின் தலைமைச் செயலகத்தின் முன்பாக சில காவல்துறையினர் நின்றிருந்த போது, அவர்களை நோக்கி ஓடி வந்த குறித்த நபர், காவல்துறையினரின் துப்பாக்கியை பறிக்க முற்பட்டுள்ளார்.
அவரது கையில் உடைந்த கண்ணாடிப்போத்தல் ஒன்றின் துண்டு இருந்ததாகவும், அதை வைத்துக்கொண்டு காவல்துறையினர் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மொத்தமாக மூன்று காவல்துறை வீரர்கள் காயமடைந்ததாகவும், தாக்குதல் மேற்கொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலாளி சூடான் நாட்டு குடியுரிமை கொண்டவர் எனவும், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாகவும் தெரிவிக்கப்படுகிறது.