சீனாவில் இருந்து பொதிகளுக்கு தடை - அமெரிக்க தபால் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
5 மாசி 2025 புதன் 10:03 | பார்வைகள் : 384
ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் வர்த்தகப் போருக்கு மத்தியில் சீனா மற்றும் ஹொங்ஹொங்கிலிருந்து வரும் பொதிகளை ஏற்க அமெரிக்க தபால் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உள்ளது.
செவ்வாய்க்கிழமை முதல் இந்த மாற்றம் அமுலுக்கு வருவதாக குறிப்பிட்டுள்ள நிலையில், சீனா மற்றும் ஹொங்ஹொங்கிலிருந்து வரும் கடிதங்களுக்கு பாதிப்பு இருக்காது என்றே கூறப்படுகிறது.
சீனா மற்றும் ஏனைய நாடுகளில் இருந்து வரும் 800 டொலருக்கும் குறைவான பொதிகளின் வருகையை கட்டுப்படுத்தும் ட்ரம்பின் முடிவுக்கு தொடர்புடையதா என்பதை அமெரிக்க தபால் சேவை உறுதி செய்ய மறுத்துள்ளது.
சீனா மீது கூடுதலாக 10 சதவீத வரியை அமுல்படுத்துவதன் ஒரு பகுதியாக, குறைந்த விலை இறக்குமதிகள் வரி இல்லாமல் அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதிக்கும் நூற்றாண்டு பழமையான வர்த்தகச் சட்டத்தை ஜனாதிபதி ட்ரம்ப் நிறுத்தியிருந்தார்.
ஆனால் தமது இலக்கு என்பது அமெரிக்காவிற்குள் ஃபெண்டானைல் மற்றும் அது சார்ந்த இரசாயனங்களின் ஏற்றுமதியை சமாளிப்பதே என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கனடா மற்றும் மெக்ஸிகோ நாடுகளுக்கும் 25 சதவிகித வரி விதிப்பதாக ட்ரம்ப் கூறியிருந்தார். ஆனால், கடைசி கட்ட பேச்சுவார்த்தையில் ட்ரம்பின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது, இதனையடுத்து ஒரு மாத காலம் வரி விதிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.